2007ஆம் ஆண்டு இலங்கைக்கான நிதியுதவியை இடைநிறுத்துமாறு ஜப்பானிடம், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததாக விக்கிலீக்ஸ் சர்ச்சைக்குரிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
டுவிட்டர் பதிவொன்றில் விக்கிலீக்ஸ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு நிதி உதவிகளை வழங்குவதனை நிறுத்துமாறு ரணில் கோரியதாகவும், அதற்கு நாட்டின் தலைவர்கள் தரகு பெற்றுக் கொள்வதனாலும், மக்களை உதாசீனம் செய்வதனாலும் அந்த நாட்டு மக்கள் பாதிக்கப்படக் கூடாது எனவும் உதவி வழங்குவதனை நிறுத்த முடியாது என ஜப்பான் பதிலளித்திருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை அப்போது இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ பிளெக் அமெரிக்க அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியிருந்தார்.
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பூரண விசாரணை நடாத்துவதற்கு தயார் என அப்போதைய அதிபர் மகிந்த ராஜபக்ச, இலங்கைக்கான ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூசி அக்காசியிடம் உறுதியளித்திருந்தார் என விக்கிலீக்ஸ் மேலும் குறிப்பிட்டுள்ளது.
சர்வகட்சி பேரவையின் ஊடாக பரிந்துரை செய்யப்படும் தீர்வுகளை நடைமுறைப்படுத்த தயார் எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டிருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, அப்போதைய ஜே.வி.பி தலைவர் சோமவன்ச அமரசிங்க, அதிகாரம் பகிரப்படுவதனை விரும்பவில்லை என யசூசி அக்காசியிடம் கூறியிருந்தார் என விக்கிலீக்ஸ் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குறிப்பு அடங்கிய விக்கிலீக்ஸ் பதிவினை பகிர்ந்து ஜனாதிபதியின் பதவிப் பிரமாணம் குறித்து டுவிட்டர் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.