பாராளுமன்றில் சற்றுமுன் இடம்பெற்ற இடைக்கால ஜனாதிபதியை தெரிவு செய்யவதற்கான இரகசிய வாக்கெடுப்பின் பிரகாரம் இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்.
இலங்கையின் இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க இன்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு இன்று
காலை 10 மணிக்கு பாராளுமன்றத்தில் ஆரம்பமானது.
1981 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான விசேட ஏற்பாடுகள் கட்டளைச் சட்டத்திற்கு அமைய, பாராளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு இடம்பெற்றது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர்,
புதிய ஜனாதிபதி ஒருவர் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளின் மூலம் தெரிவுசெய்யப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
இதற்கு முன்னர் 1993ஆம் ஆண்டு ரணசிங்க பிரேமதாச கொலை செய்யப்பட்ட போது, வெற்றிடமாகிய ஜனாதிபதி பதவிக்காக அப்போதைய பிரதமராகவிருந்த டீ.பி விஜேதுங்க, பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரின் ஒருமித்த இணக்கப்பாட்டுடன் வாக்கெடுப்பு இன்றி ஜனாதிபதியாக தெரிவானார்.
எஞ்சியுள்ள இரண்டரை வருடங்களுக்கு நாட்டை நிர்வகிக்கும் தகுதியைப் பெற்ற வேட்பாளருக்கு சகல அதிகாரங்களும் வழங்கப்படவுள்ளன.
தற்போது தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி தமது விருப்பத்திற்கு அமைய இராஜினாமா செய்யாவிடின், குற்றப்பிரேரணையின் மூலமே அவரை பதவியிலிருந்து நீக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.