Sunday, January 26, 2025
HomeLatest Newsவரி திருத்தச் சட்டமூலம் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்- கணேசமூர்த்தி தகவல்!

வரி திருத்தச் சட்டமூலம் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்- கணேசமூர்த்தி தகவல்!

வரிக் கொள்கையின் முக்கியமானது அறவிடப்படும் வரி நியாயமானதாகவும் வெளிப்படையாகவும் காணப்படவேண்டும். அவை பொது மக்களால் செலுத்தப்படக்கூடியதாகவும் காணப்பட வேண்டும்.

இருப்பினும், நாடு தற்போது பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில் வரிக் கட்டமைப்பில் திருத்தங்களை கொண்டுவந்து, வரி வீதங்களை அதிகரிப்பதன் மூலம் தொழில் செய்யும் வறியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

இதனூடாக மேலும் நாட்டில் வறுமை நிலை ஏற்பட்டு எதிர்காலத்தில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் வாய்ப்புகளை உருவாக்கும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம். கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியொன்றில் கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

குறிப்பாக, அரசாங்கத்துக்கு வரி வருவாயை திரட்டிக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக 2018ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வரி விடுப்புகள், வரிச் சலுகைகள் அரசாங்கத்தின் வரி வருவாய்களில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது.

இந்த பாதிப்பை ஈடு செய்ய அரசாங்கத்துக்கு வரி வருவாயை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

கடந்த மாதம் நாட்டின் பணவீக்கம் 70 சதவீதமாகும். உதாரணமாக கடந்த வருடம் இதே காலப்பகுதியில் ஒரு இலட்சம் பணத்தை வைத்திருந்தால், அதே ஒரு இலட்சம் ரூபாய் பணத்தின் தற்போதைய உண்மையான பெறுமதி 30 ஆயிரம் ரூபாவாகவும் காணப்படுகிறது.

இந்நிலையில் வரி வீதம் 36 வீதமாக அதிகரிக்கப்பட்டு இருக்கும் நிலையில் ஒரு இலட்சம் ரூபாவின் உண்மையான பெறுமதி 30 ஆயிரம் ரூபாவாக காணப்படும் சந்தர்ப்பத்தில் வரி வீதத்துக்கு ஏற்ப 36 ஆயிரம் ரூபாயை செலுத்த வேண்டியேற்பட்டால், அவர் மேலதிகமான 6,000 ரூபாவை வெளியில் பெற்று வரியை செலுத்த வேண்டும்.

ஆகவே, பணவீக்கம் அதிகமாக காணப்படும் சந்தர்ப்பத்தில் நாட்டு மக்களிடம் மேலும் வரிவீதங்களை அதிகரிப்பது என்பது மரத்தால் விழுந்தவனை மாடு ஏறி மிதித்ததை போன்றதொரு நடவடிக்கையாகும்.

வரி அறிவிட்டு வீதங்கள் அதிகரிப்பதற்கு வரி வருவாய்களில் சில வரையறைகள் இருக்கின்றன. இப்போது கொண்டுவரப்பட்டுள்ள வரி திருத்தம் இந்த வரையறைகளை மீறியதாக காணப்படுகிறது.

நாட்டில் பொருளாதார பின்னடைவுகள் காணப்படும்போது வரி அதிகரிப்பு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

சமூகத்தில் வேலையின்மை அதிகரிக்கும், மக்களுடைய கொள்வனவு சக்தியை மேலும் குறைக்கும். மேலும், அவை பொருட்கள், சேவைகளின் கேள்வியை குறைக்கும், வாழ்க்கை செலவு அதிகரிக்கும், அதன் காரணமாக வறுமை அதிகரிக்கும்.

மேலும், வரிக் கொள்கையில் முக்கியமானது, அறவிடப்படும் வரி நியாயமானதாகவும் வெளிப்படையாகவும் காணப்பட வேண்டும். அவை செலுத்தப்படக்கூடியதாக காணப்பட வேண்டும்.

சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், தொழில் புரியக்கூடிய வறியவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். தனது சம்பளத்தை கொண்டு செலவுகளை ஈடுசெய்ய முடியாதபோது இவ்வாறான குழுவினர் உருவாகுவர்.

மேலும், வரி திருத்தச் சட்டமூலம் சமூகத்தில் கொந்தளிப்பு நிலையை உருவாக்கும். நிச்சயமாக ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் வலுப்பெறும் வாய்ப்புகளை உருவாக்கும் என்றார்.

Recent News