உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனையால் ஆண்கள், ஆண்மைத்தன்மையை காலப்போக்கில் இழந்துவிடுவார்கள். கடந்த காலங்களில் 10 இல் ஒரு குடும்பத்தினருக்குத்தான் குழந்தைப் பாக்கியம் இருக்காது. இப்போது அது 7 இல் ஒரு குடும்பமாக மாறியிருக்கின்றது – இவ்வாறு மூத்த விரிவுரையாளரும், சிறுநீரக சனனத் தொகுதி சத்திர சிகிச்சை நிபுணரும், மருத்துவக் கலாநிதி பா.பாலகோபி தெரிவித்தார்.
உயிர்கொல்லி ஹெரோய்ன் உள்ளிட்ட போதைப் பொருள்களை பாடசாலை மாணவர்கள் மற்றும் இளவயதினரிடையே விநியோகிப்பவர்கள், இதனைப் பயன்படுத்துவதன் ஊடாக ஆண்மை அதிகரிக்கும் என்று உண்மைக்குமாறான பரப்புரையை முன்னெடுத்து வருகின்றனர்.
உடலுறவு கொள்வதற்கு இது உற்சாகமளிக்கும் என்றும் அவர்களால் முன்னெடுக்கப்படும் போலிப் பரப்புரை தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு விளக்கமளித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
மூன்று தசாப்தகால போரிலே சிதைக்கப்பட்ட எமது இளம் சமுதாயம் இன்று உயிர்கொல்லி போதைப்பொருள்களுக்கு அடிமையாகி அவர்களது இளமைக்காலத்தையும் எதிர்காலத்தையும் இழந்துகொண்டிருப்பது மிகவும் கவலையளிக்கின்றது.
உயிர்கொல்லி போதைப்பொருள்கள் ஆண்களினுடைய ஆண்மைத்தன்மையை காலப்போக்கிலே குறைக்கின்றது. அவர்களுடைய விதைகளிலே ஏற்படுத்துகின்ற பாதிப்பு காரணமாக நாளடைவில் விந்துருவாக்கத்தை பாதிக்கின்றது.
அதுமட்டுமல்லாமல் ஆண்குறியில் விறைப்புத்தன்மை ஏற்படுவதையும் குறைக்கின்றது. இதனால் இவர்கள் திருமணம் செய்துகொள்கின்றபோது குழந்தைப் பாக்கியத்தை பெறுவதிலே சிக்கல் ஏற்படுகிறது.
முன்பு 10 இல் ஒரு குடும்பத்தில்தான் குழந்தையின்மை இருக்கும். ஆனால் இன்று அது 7 இல் ஒரு குடும்பமாக அதிகரித்திருக்கிறது.
இது மட்டுமல்லாமல் பெண்கள் தெரிந்தோ தெரியாமலோ உயிர்கொல்லி போதைப்பொருளுக்கு அடிமையாகின்ற போது தேவையற்ற குழந்தை உருவாக்கங்களை ஏற்படுத்துவதோடு சமூகப் பிரச்சினைகளையும் ஏற்படுத்துகின்றது.
அத்துடன் பிறக்கின்ற குழந்தைகளிலும் அது பாதிப்பை ஏற்படுத்துகிறது. குழந்தை நிறை குறைந்ததாகவோ அல்லது அங்கங்களிலே ஊனமுற்றவர்களாகவோ அல்லது இறந்து பிறக்கின்ற நிலைமைகள் ஏற்படலாம்.
எனவே எமது இளம் சமுதாயத்தை தேக ஆரோக்கியமுள்ளவர்களாக உருவாக்குவதற்கு உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனையை முற்றாக அகற்றுவது எம் ஒவ்வொருவருடைய கடமையாகும் – என்றார்.