புதிய உணவுப் பாதுகாப்புச் சட்டங்களைக் கொண்டுவருவதற்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு மத்தியில், சர்வதேச ஆதரவுடன் கைதிகளுக்கு நவீன விவசாய முறை குறித்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பு மற்றும் போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் ஆகியவற்றின் உதவியுடன் சிறைச்சாலைகள் திணைக்களம் இதனை முன்னெடுத்துள்ளது.
உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு எதிர்காலத்தில் புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வாரம் தெரிவித்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டில் அதிகப்படியான அரிசி கையிருப்பு, அரிசியின் விலை வீழ்ச்சி, மற்றும் விவசாயிகளின் வருமானம் பாதுகாக்கப்பட வேண்டும் என கூறி அரிசி இறக்குமதிக்கு இலங்கை தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.