Saturday, November 23, 2024

தபால் பெட்டியை போல் வடிவமைக்கப்பட்ட தபால் நிலையம்!

தற்பொழுது உலகமே தபால்கள் அனுப்புவதை விட்டுவிட்டு இமெயில் எஸ்.எம்.எஸ். வட்ஸ்அப் போன்ற இணைய தளங்களில் செய்திகளை பரிமாறிக் கொள்கின்றனர்.

இருப்பினும் செல்போன் காலம் வருவதற்கு முன்பு, தபால்கள் மூலம் தான் எல்லா செய்திகளும் பரிமாறப்பட்டது.

கல்யாணம் செய்தி முதல் கருமாதி செய்தி வரை எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள ஊருக்குள் தபால்காரர் வரும் வரையில் பொதுமக்கள் ஏங்கி காத்திருந்த காலங்கள் உண்டு.

இந்நிலையில் உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்திருக்கும் தபால் நிலையம் தபால் பெட்டி போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தில் அமைந்திருக்கும் ஸ்பிட்டி மாவட்டத்தில் உள்ள ஹிக்கிம் கிராமம் தான் உலகிலேயே மிக உயரமான இடத்தில் அமைந்திருக்கும் கிராமம்.

இந்த கிராமம் கடல் மட்டத்தில் இருந்து 14400 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 1983ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தபால் நிலையம், உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்திருக்கும் தபால் நிலையம் ஆகும். இந்த கிராமத்திற்கு பொதுவாகவே சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கின்றன.

ஆகையால் சுற்றுலா பயணிகளை மேலும் கவரும் வகையில், இந்த தபால் நிலையத்தை தபால் பெட்டி போல வடிவமைத்துள்ளனர். உலகிலேயே மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள இந்த தபால் நிலையத்தை இமாச்சலப் பிரதேச தலைமை தபால் மாஸ்டர் வந்திதா கவுல் திறந்து வைத்தார்.

இதுகுறித்து தலைமை தபால் மாஸ்டர் வந்திதா கவுல் கூறுகையில்,

“உலகம் முழுவதிலிருந்தும் வரும் சுற்றுலா பயணிகள் தங்கள் அன்பானவர்களுக்கு இந்த தபால் நிலையத்தில் இருந்து கடிதங்களை அனுப்புகின்றனர். இந்த தபால் நிலையம் சுற்றுலா பார்வையில் ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது.” என்று தெரிவித்தார்.

Latest Videos