Sunday, February 23, 2025
HomeLatest Newsபோதைப்பொருள் வைத்திருந்தால் இன்று முதல் மரண தண்டனை..!

போதைப்பொருள் வைத்திருந்தால் இன்று முதல் மரண தண்டனை..!

ஐந்து கிராமிற்கு அதிகமான ஐஸ் ரக போதைப்பொருளை வைத்திருக்கும் அல்லது விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கக்கூடிய வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ள நச்சு பொருள், அபின் மற்றும் அபாயகர ஒளடதங்கள் சட்டம் தற்போது அமுலில் உள்ளது.

இன்று முதல் இந்த புதிய சட்டத்தின் கீழ் குற்றம்புரிந்தவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் 19 ஆம் திகதி, நச்சுப்பொருள், அபின், அபாயகர ஒளடதங்கள் சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. குறித்த சட்டமூலத்தில் கையொப்பமிட்டு, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று சான்றுரைப்படுத்தினார்.

போதைப்பொருளை கொண்டு வருதல், வைத்திருத்தல் மற்றும் பயன்படுத்தல் தொடர்பில் காலத்தின் தேவைக்கு ஏற்ப சட்டங்களை வலுப்படுத்தும் வகையில் இந்த சட்டம் திருத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் இந்த மாத முதல் வாரமளவில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில், 103 கிலோகிராமிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் காவல்துறையால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது, 7,536 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News