சிங்கப்பூர் மக்கள் அண்மைக்காலமாக தங்கத்தை வாங்குவது அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக தங்க மன்றம் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, இந்த விடயம் தெரியவந்துள்ளது.
சிங்கப்பூரில் இந்தாண்டின் இரண்டாவது காலாண்டில் 43 சதவீதம் உயர்ந்து சுமார் 3.8 தொன் தங்கம் விற்பனையாகியுள்ளது. கடந்த 2021-ன் இரண்டாவது காலாண்டில் 2.7 தொன் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
தங்க நகைக்கான தேவை அதிகரித்ததும் தங்கக் காசுகள், தங்கக் கட்டிகள் போன்றவற்றின் மீது ஆர்வம் காட்டியதும் மக்களின் தேவை அதிகரித்ததற்கு காரணம் என்று உலகத் தங்க மன்றம் தெரிவித்தது.
தங்க நகைகளுக்கான தேவை 2021-ன் இரண்டாவது காலாண்டில் 1.7 தொன்னாக இருந்தது. ஆனால் இந்தாண்டின் இரண்டாவது காலாண்டில் தங்கத்திற்கான தேவை 2.4 தொன்னாக அதிகரித்துள்ளது.
கொவிட்-19 தொற்று பரவலுக்கு பின்னர் சிக்கலான நிலையின் போது தங்கம் பாதுகாப்பு அளிக்கக்கூடிய சொத்து என்பதை பெரும்பாலானோர் உணர்ந்ததாக லிட்டில் இந்தியாவில் நகைக்கடையை நடத்திவரும் உரிமையாளர் தெரிவித்தார்.