Friday, November 15, 2024
HomeLatest Newsஆதாரமற்ற போர் குற்றச்சாட்டுகள் மூலம் கோட்டாவை அச்சுறுத்தும் தரப்பினர்! சட்டத்தரணி தகவல்

ஆதாரமற்ற போர் குற்றச்சாட்டுகள் மூலம் கோட்டாவை அச்சுறுத்தும் தரப்பினர்! சட்டத்தரணி தகவல்

செவிவழி சாட்சியங்களின் அடிப்படையிலும், ஆதாரமற்ற போர் குற்றச்சாட்டுகள் மூலமும் சில தரப்பினரால் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு வரும் அச்சுறுத்தல்களிடமிருந்து அவரை பாதுகாக்கும் பொறுப்பிலிருந்து அரசாங்கம் விடுபட முடியாது என ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா புதிய அரசாங்கத்திற்கு நினைவூட்டியுள்ளார்.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியை போர் குற்றம் தொடர்பாக கைது செய்யுமாறு சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் தென்னாபிரிக்காவை தளமாக கொண்ட சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் (ITJP) சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக சட்டத்தரணி தெரிவித்ததாவது,

“முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச படுகொலைகள் உட்பட பல கொடூரமான குற்றங்களுக்கு காரணமான விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை, 2009 மே மாதம் இலங்கை வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டுவந்தது.

இந்த நிலையில், முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும் குறிப்பிட்ட தரப்பினருக்கு உதவும் வகையிலும் முன்னாள் ஜனாதிபதிக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்திருக்கலாம்.

முன்னாள் ஜனாதிபதி தனது மனைவி மற்றும் 2 மெய்ப்பாதுகாவலர்களுடன் ஜூலை 14ஆம் திகதி மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் சென்றடைந்துள்ளார். தொடர்ந்து, அங்கு அவருக்கு பாதுகாப்பாற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கம், முன்னாள் ஜனாதிபதி பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி இலங்கையில் வாழ்வதற்கு அரசின் பாதுகாப்பில் தங்குமிடங்கள் உட்பட போதுமான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

Recent News