Tuesday, January 14, 2025
HomeLatest Newsஇந்திய எல்லைக்குள் நுழைந்த பாக்கிஸ்தான் போர்க் கப்பல்!

இந்திய எல்லைக்குள் நுழைந்த பாக்கிஸ்தான் போர்க் கப்பல்!

கடந்த வாரம் இந்தியாவின் குஜராத் கடல் எல்லைக் கோட்டைத் தாண்டி இந்தியாவின் எல்லை பகுதிக்குள் பாக்கிஸ்தானின் ( Alamgir )ஆலம்கிர் என்னும் போர்க் கப்பல் நுழைந்துள்ளதாகவும் அதனையடுத்து இந்தியா மேற்கொண்ட அதிதீவிர நடவடிக்கைகளையடுத்து மேற்படி போர்க் கப்பல் பின்வாங்கி சென்றுள்ளதாகவும் இந்திய பாதுகாப்புச் செய்திகள் தெரிவித்துள்ளன.

இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, கடந்த வாரம் பாக்கிஸ்தானின் ஆலம்கிர் என்ற போர்க் கப்பல் குஜராத் கடல் எல்லைக் கோட்டைத் தாண்டி இந்திய எல்லைக்குள் பிரவேசித்ததாகவும் இதனால் உஷாரடைந்த இந்திய கடலோர காவல் படையினர் தமது டோனியர் (Dornier) எனப்பட்ட கண்காணிப்பு விமானங்களை எல்லைப் பகுதிகளுக்கு அனுப்பி பாக்கிஸ்தான் போர்க் கப்பலை எச்சரிக்கை செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், பலமுறை முயற்சித்தும் பாக்கிஸ்தான் போர்க் கப்பலின் மாலுமிகளோ, கடற்படைத் தள அதிகாரிகளோ எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.

இதனால், மேலும் அதிருப்தியடைந்த இந்திய கடற்படை, போர் விமானங்களை எல்லைப் பகுதிகளுக்கு அனுப்பி தாக்குதல் எச்சரிக்கையை விடுத்த சிறிது நேரத்தில் ‘ஆலம்கிர்’ என்ற பாக்கிஸ்தானின் போர்க் கப்பல் இந்திய எல்லைகளை விட்டு பின்வாங்கி சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

என்ன நோக்கத்திற்காக மேற்படி போர்க் கப்பல் இந்திய எல்லைக்களுக்குள் ஊடுரூவியது என்ற காரணங்கள் தெரியவில்லை என்றும் இதைக் குறித்த கருத்து வெளியிட பாக்கிஸ்தான் பாதுகாப்புத்துறை மறுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பெரும்பாலும் இந்தியாவின் எல்லைப் பகுதிகளுக்குள் எந்தளவு தூரம் வரை செல்ல முடியும் என்பதை கணக்கிடுவதற்காக மேற்படி போர்க் கப்பலை பாக்கிஸ்தான் திடீரென இந்திய எல்லைக் கோட்டைத் தாண்டி அனுப்பியிருக்கலாம் என புலனாய்வுத்துறை செய்திகள் தெரிவிக்கின்றன.

Recent News