கடந்த மாதம் பாகிஸ்தானில் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கு காரணமாக 1600 க்கும் மேற்பட்ட மக்கள் இறக்க நேரிட்டிருந்தது.
இதன் காரணமாக நாட்டில் வெள்ளம் தேங்கியதால் நுளம்புகள் பெருகி பல தொற்று நோய்கள் உருவாகும் அபாயம் அதிகரித்து வருகின்றது.
இதனால் மக்களது நிலை நாளுக்கு நாள் மேலும் மோசமடைந்து வருவதால் தற்போது பாகிஸ்தானுக்கு உதவுவதற்கு இந்தியா முன்வந்துள்ளது.
இதனடிப்படையில் தொற்றுநோய் அபாயத்துக்கு உள்ளாகியுள்ள பாகிஸ்தான் மக்களுக்கு 6.2 மில்லியன் நுளம்பு வலைகளை வழங்குவதற்கு இந்தியா முன்வந்துள்ளது.
இதனை ஏற்றுக்கொள்ளும் விதமாக நேற்றைய தினம் பாகிஸ்தான் அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் 32 மாவட்டங்களில் மலேரியா நோய் தொற்று அதிகரித்துள்ளதாகவும் இதில் சிறுவர்கள் பலரும் பாதிக்கப்படுவதாகவும் பாகிஸ்தான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் மக்களுக்கு உலக சுகாதார அமைப்பும் பல்வேறு உதவிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் பாகிஸ்தானிற்கு 816 மில்லியன் டாலர் நிதி உதவி வழங்குவது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.