Wednesday, December 25, 2024
HomeLatest Newsஏதிலிகள் முகாமில் இலங்கை தமிழ் பெற்றோருக்குப் பிறந்த பெண்ணுக்கு இந்திய கடவுச் சீட்டை வழங்க உத்தரவு

ஏதிலிகள் முகாமில் இலங்கை தமிழ் பெற்றோருக்குப் பிறந்த பெண்ணுக்கு இந்திய கடவுச் சீட்டை வழங்க உத்தரவு

தமிழகம் – ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம் அகதிகள் முகாமில் 1986ஆம் ஆண்டு இலங்கைத் தமிழ்ப் பெற்றோருக்குப் பிறந்த பெண்ணுக்கு 1955ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தின்படி, அவர் இந்தியக் குடியுரிமை கொண்டவர் என்று சென்னை மேல் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பளித்துள்ளது.

எனவே அவருக்கு இந்திய கடவுச் சீட்டை வழங்க அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்போது திருச்சி அகதிகள் முகாமில் வசிக்கும் கே.நளினி என்ற பெண் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

இலங்கையில் உள்நாட்டுப் போரில் ​​தமிழர்களுக்கு எதிரான அட்டூழியங்கள் நடந்த போது தனது பெற்றோர் இந்தியாவுக்கு வந்ததாக மனுதாரர் கூறியிருந்தார்.

தாம் 1986 ஏப்ரல் 21 இல் மண்டபம் அகதிகள் முகாமில் பிறந்ததாகவும், தற்போது திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருப்பதாகவும் மனுதாரர் தெரிவித்திருந்தார்.

தற்போது வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைத்த நிலையில் இந்திய கடவுச் சீட்டுக்கு விண்ணப்பித்த போதும், தமது குடியுரிமை குறித்து அதிகாரிகளுக்கு சந்தேகம் இருந்ததால், அதனை வழங்கவில்லை என மனுதாரர் தெரிவித்திருந்தார்.

இந்திய குடியுரிமைச் சட்டத்தின் 3வது பிரிவின்படி, 1950 ஜனவரி 26 அன்று அல்லது அதற்குப் பிறகு இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவரும் இந்தியக் பிரஜையாக இருக்க வேண்டும் என்று நளினி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் சட்டத்தின் படி, அவர் ஒரு இந்திய பிரஜையாவார்.

எனவே அவர் கடவுச்சீட்டை பெற தகுதியானவர் என்று கூறி மனுதாரருக்கு கடவுச்சீட்டை வழங்க திருச்சி கடவுச் சீட்டு அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News