Thursday, March 28, 2024
HomeLatest Newsசுதந்திர தின நிகழ்வில் தேசிய கீதம் பாடுவதற்கு மட்டும் ஒரு கோடி ரூபா செலவு!

சுதந்திர தின நிகழ்வில் தேசிய கீதம் பாடுவதற்கு மட்டும் ஒரு கோடி ரூபா செலவு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் எதிர்வரும் 4 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள 75 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் தேசிய கீதம் பாடுவதற்கு மாத்திரம் ஒரு கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தினக் கொண்டாட்டம் தொடர்பான கூட்டம் இதை ஏற்பாடு செய்யும் உள்நாட்டலுவல்கள் அமைச்சில் இடம்பெற்றது. சுதந்திர தின நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அனைவரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

கலாசார நிகழ்வுக்கு ஒரு கோடி 50 இலட்சம்  ரூபா, தெற்கில் இருந்து வடக்கு வரையான சைக்கிள் சவாரிக்கு 2 கோடி ரூபா, சுதந்திர தினத்தைக் கண்டு கழிப்பதற்காக தெற்காசிய நாடுகளில் இருந்து வருகை தரும் அந்நாட்டுத் தலைவர்கள், அதிதிகள் உள்ளிட்டவர்களின் தங்குமிடம் உள்ளிட்ட செலவுக்காக ஒரு கோடி 90 இலட்சம் ரூபா செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தக் கொண்டாட்டத்தையொட்டி ஆயிரம் ரூபா பணம் ஆயிரம் வெளியிடுவதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. இதற்காக அவர்கள் கேட்டிருக்கும் செலவு 2 கோடி 20 இலட்சம் ரூபாவாகும்.

கொண்டாட்டத்தைப் பார்வையிடுவதற்காக வருபவர்கள் தாற்காலிகமாகத் தங்குவதற்காக அமைக்கப்படும் கூடாரங்களுக்கான செலவு 4 கோடி ரூபா.

அன்றைய தினம் தேசிய கீதம் பாடுவதற்கான செலவு ஒரு கோடி ரூபா. தேசிய கீதம் பாடும் சிறுவர்களின் பயிற்சி, ஆடை அலங்காரம், வாகன ஏற்பாடு உணவு உள்ளிட்ட விடயங்கள் இதற்குள் அடங்குகின்றன.

தேசிய கீதம் பாடுவதற்காகக் கொழும்பு பாடசாலைகளில் இருந்து 115 மாணவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ். சேனநாயக்கவின் உருவச் சிலைக்குப் போடப்படும் மாலைகளுக்கான செலவு 97 ஆயிரத்து 500 ரூபாவாகும்.

Recent News