வட கொரியா தன்னுடைய தலைநகா் பகுதியிலிருந்து 2 ‘பலிஸ்டிக்’ வகை ஏவுகணைகளை வீசி மீண்டும் புதன்கிழமை சோதனை நடத்தியது .
கிழக்குக் கடல் பகுதியை நோக்கி வீசப்பட்ட அந்த இரு ஏவுகணைகளும் 550 கி.மீ. பாய்ந்து சென்று கடலில் விழுந்தன என்று ராணுவம் கூறியது.
1950-53-ஆம் ஆண்டின் கொரிய போருக்குப் பிறகு அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து அவ்வப்போது கூட்டு ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் இது, தங்களது நாட்டின் மீது போா் தொடுப்பதற்கான ஒத்திகை என்று வட கொரியா கருதுகிறது.
இத்தகைய பயிற்சிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வட கொரியா ஏவுகணைகளை வீசி சோதித்து வருகின்ற சூழலில், தென் கொரிய கடல் பகுதியில் அணு ஆயுதம் ஏந்திய நீா்மூழ்கிக் கப்பலை அமெரிக்கா அண்மையில் நிறுத்தியதற்கு எதிா்ப்பு தெரிவித்து வட கொரியா இந்த ஏவுகணை சோதனையை நடத்தியதாகக் கூறப்படுகிறது.