இந்தியாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தூதரகங்கள் உள்ளன. அவற்றில் அந்நாட்டு தூதர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அமெரிக்காவை சேர்ந்த 4 பெண் தூதர்கள் டெல்லியில் உள்ள தூதரகத்தில் பணியாற்றி வருகின்றனர்.
ஆனால், அவர்கள் துப்பாக்கி குண்டுகள் (புல்லட்) துளைக்காத கவச வாகனங்களில் செல்வதற்கு பதிலாக ஆட்டோ ரிக்சாவில் பயணம் செய்வதிலேயே விருப்பம் கொண்டுள்ளனர். இதற்காக தனியாக ஆட்டோவை வாங்கி வைத்து உள்ளனர்.
அவற்றிலேயே 4 தூதர்களும் பணிக்கு செல்கின்றனர். இதுதவிர, பணி நிமித்தம் எங்கேனும் செல்ல வேண்டுமென்றாலும் அவர்கள் கருப்பு மற்றும் பிங்க் வண்ணம் கொண்ட ஆட்டோவிலேயே பயணம் மேற்கொள்கின்றனர்.
அவர்களே ஆட்டோவை ஓட்டியும் செல்கின்றனர் என்பது கூடுதல் அம்சம். அப்படி என்ன அதில் விருப்பம் உள்ளது என்பதற்கு அவர்களே விளக்கமும் அளித்துள்ளனர். அது, வெளியே போகும்போது, சுதந்திரம் ஆக பயணிக்கும் உணர்வை ஏற்படுத்துகிறது என கூறுகின்றனர்.
ஆன் எல் மேசன், ரூத் ஹோம்பெர்க், ஷரீன் ஜே கிட்டர்மேன் மற்றும் ஜெனிபர் பைவாட்டர்ஸ் ஆகியோரே அந்த 4 அமெரிக்க பெண் தூதர்கள் ஆவர்.
அவர்களில் தூதர் ஆன் கருப்பு வண்ணத்தில் ஆட்டோ வைத்துள்ளார். புளூடூத் உபகரணமும் அதனுடன் இணைக்கப்பட்டு உள்ளது.
வரிப்புலியின் உருவம் பதிக்கப்பட்ட திரைச்சீலையையும் தொங்க விட்டு உள்ளார். இதுபற்றி ஆன் கூறும்போது, இந்தியாவுக்கு வருவதற்கு முன் பாகிஸ்தானில் இருந்தபோது, பெரிய, அழகிய, கவச வாகனங்களில் வருவேன்.
ஆனால், தெருவில் போகும் ஆட்டோ ரிக்சாவை எப்போதும் பார்த்து கொண்டே இருப்பேன். அதில் பயணிக்கவும் விரும்புவேன் என கூறுகிறார்.
இந்த உந்துதல் தனது தாயிடம் இருந்து வந்தது என கூறும் ஆன், வாழ்க்கை மற்றும் தாயார் எனக்கு, விருப்பமுள்ள விசயங்களை செய்யும்படி கற்று கொடுத்துள்ளனர். ஏனெனில் முதலாவது, உங்களுக்கு மற்றொரு முறை அதுபோன்ற சந்தர்ப்பம் அமையாது.
இரண்டாவது, உங்களுக்கு என்ன அனுபவம் கிடைக்கும் என்பது உங்களுக்கு தெரியாமலேயே போய் விடும் என கூறுகிறார்.
பிங்க் வண்ண ஆட்டோ வைத்திருக்கும் ஷரீன் கூறும்போது, மெக்சிகன் நாட்டு தூதரிடம் இருந்து இந்த உந்துதலை நான் பெற்றேன் என கூறுகிறார்.
அவரும் 10 ஆண்டுகளுக்கு முன் ஆட்டோவும், அதற்கான ஓட்டுனரும் வைத்திருந்து உள்ளார். தொடர்ந்து ஷரீன், இந்தியா வந்தபோது ஆன் மேசனிடம் ஆட்டோ இருந்தது. அதனால், நானும் சொந்த ஆட்டோவை வைத்து கொள்வது என முடிவெடுத்தேன்.
வைத்திருக்கிறேன். அதனை ஓட்ட விரும்பினேன். அதுவே எனது முழு இலக்கு என கூறுகிறார். ரூத் கூறும்போது, தூதர் என்றால் உயரிய பதவி என்றெல்லாம் கிடையாது.
தூதர் என்பது மக்களை மக்கள் சந்திப்பது. மக்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வது. ஓர் உறவை கட்டமைத்து கொள்ளும் வாய்ப்பு பெறுவது. அதனையே ஆட்டோவை வைத்து நான் செய்து கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.