இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணவும், அந்நிய செலாவணி கையிருப்பை மேம்படுத்தவும் அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக சுற்றுலாத்துறையை சீரமைக்க முடிவு செய்துள்ளதோடு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ராமாயணத்துடன் தொடர்புடைய இடங்களை இந்திய சுற்றுலா பயணிகளுக்கு சுற்றி காட்டுவதற்காக சிறப்பு புகையிரத சேவையை செயல்படுத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
ராமாயண பாரம்பரியத்தின் அடிப்படையில் பகிரப்பட்ட கலாசார மற்றும் மத மதிப்பீடுகளை மேம்படுத்துவதில் இணைந்து பணியாற்ற கடந்த 2008ம் ஆண்டு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டிருந்தன.
இந்த புகையிரத சேவை மூலம் 52 இடங்களுக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்த தகவலை இலங்கை முன்னாள் கிரிக்கெட் தலைவனும் அந்த நாட்டின் சுற்றுலா தூதருமான ஜெயசூர்யா தெரிவித்து உள்ளார்.
சமீபத்தில் இந்த பதவியில் நியமிக்கப்பட்ட அவர் கொழும்பில் இந்திய தூதர் கோபால் பாக்லேவை சந்தித்து பேசியுள்ளதாக இந்திய தூதரகம் தனது டுவிட்டர் தளத்தில் நேற்று தெரிவித்துள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை மக்களுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் பொருளாதார மீட்சிக்கான கருவியாக சுற்றுலாவை மேம்படுத்துவது குறித்து இந்த கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டதாக கூறப்பட்டு இருந்தது.
தனது டுவிட்டர் தளத்திலேயே பதிலளித்த ஜெயசூர்யா இந்திய தூதருக்கு நன்றி தெரிவித்துள்ளதோடு “இந்திய சுற்றுலா பயணிகளுக்கு ராமாயண புகையிரத சேவையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவோம்” என குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கிடையே ஓராண்டில் பலமுறை இலங்கைக்கு வந்து செல்லும் சிறப்பு விசாவை சுற்றுலா பயணிகளுக்கு வழங்கும் திட்டத்துக்கு இலங்கை மந்திரிசபை ஒப்புதல் அளித்து உள்ளது.
முன்னதாக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தனிநபர் முதலீட்டாளர்களுக்கு நீண்ட கால விசா வழங்கும் நடைமுறையை கடந்த மார்ச் மாதம் அறிமுகம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.