பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பதவி விலகியதை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதை தொடர்ந்து புதிய பிரதி சபாநாயகர் தெரிவு சபாநாயகர் தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது.
இதன்படி இன்று காலை பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திலிருந்து விலகி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்ததை தொடர்ந்து சுதந்திர கட்சியின் உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு எழுத்து மூலமாக கடந்த மாதம் முதல் வாரத்தில் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து பதவியில் இருந்து விலகுவதாக ரஞ்சித் சியம்பலாபிட்டிய சமர்ப்பித்த கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளதாக சபாநாயகர் நேற்று அறிவித்திருந்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகித்த சுமார் 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்திருந்த நிலையில் சியம்பலாபிட்டிய பிரதிசபாநாயகர் பதவியில் இருந்து விலக தீர்மானித்திருந்தார்.
பிரதி சபாநாயகர் பதவிக்கு ஆளும் கட்சி சார்பில் அஜித் ராஜபக்ஷ பெயரிடப்பட்டுள்ளதுடன், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.