அரச சேவைக்கு புதிய நியமனங்கள் வழங்குவது தொடர்பில் ஆராய பிரதமரின் செயலாளர் தலைமையில் விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அரச சேவைகள் மற்றும் பொது நிர்வாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அரச ஊழியர்கள் ஓய்வுப் பெறும் வயது தொடர்பில் எழுந்த சிக்கல் நிலையால் அரச சேவையாளர்கள் ஓய்வு பெறுவது தாமதிக்கப்பட்டது.
இதற்கமைய 2022 ஆம் ஆண்டு 30 ஆயிரம் அரச ஊழியர்கள் சேவையில் இருந்து ஓய்வுப் பெற்றுள்ளார்கள்.
இந்நிலையில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரச சேவைக்கு புதியவர்களை இணைத்துக் கொள்வதை மட்டுப்படுத்த இவ்வாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
30 ஆயிரம் பேர் சேவையில் இருந்து ஓய்வுப் பெற்றுள்ள நிலையில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு சேவையில் உள்ளவர்களை கொண்டு சேவைகளை முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் ஆராய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமையவே 2023 ஆம் ஆண்டு அரச சேவைக்கு புதிய நியமனங்களை வழங்குவது தொடர்பில் ஆராய விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு மாத மதிப்பீட்டுக்கமைய இந்த குழுவினர் தமது அறிக்கையை சமர்ப்பிப்பார்கள் எனவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.