இவர் கடந்த 2018ல், “அவென்ஃபீல்ட் பிராபர்டீஸ்” எனும் வழக்கில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அந்நாட்டு பஞ்சாப் நீதிமன்றம், 10 வருட சிறை தண்டனையும், இவ்வழக்கில் தேசிய பொறுப்புக்கூறல் பணியகத்துடன் ஒத்துழைக்காதற்காக 1 வருட சிறை தண்டனை என மொத்தம் 11 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கி உத்தரவிட்டிருந்தது. அதே வருடம் அல்-அசிசியா எக்கு தொழிற்சாலை ஊழல் வழக்கில் 7 வருட சிறை தண்டனையும் அவருக்கு வழங்கப்பட்டது.
ஆனால் 2019ல், மருத்துவ சிகிச்சை பெற வெளிநாடு செல்ல வேண்டி அனுமதி கேட்ட கோரிக்கை ஏற்கப்பட்டு அவரது தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து அவர் இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு சிகிச்சைக்காக சென்றார். அப்போதிலிருந்து நவாஸ் ஷெரீப் அங்கேயே வசித்து வந்தார்.
சுமார் 4 வருடங்கள் கழித்து நவாஸ் ஷெரீப், கடந்த சனிக்கிழமை பாகிஸ்தானுக்கு திரும்பினார். அடுத்த வருடம் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் அவரை முன்னிறுத்த அவரது கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று, அவருக்கான தண்டனையை செயலாக்குவதை அரசியலமைப்பு சட்டத்தின் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பாகிஸ்தானின் காபந்து அரசாங்க கேபினெட் நிறுத்தி வைத்துள்ளதாக அந்நாட்டின் செய்தி ஒலிபரப்பு துறை அமைச்சர் ஆமிர் மிர் தெரிவித்துள்ளார். இது நவாஸ் ஷெரீப்பின் கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.