உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா பிளாட்பார்ம்ஸ் இன்கார்ப் நிறுவனத்தை ரஷியாவின் நிதி கண்காணிப்பு நிறுவனம் ரோஸ்பின்மானிடரிங் பயங்கரவாத நிறுவனமாக அறிவித்து தடை செய்யப்பட்ட பட்டியலில் இணைத்துள்ளது.
அதேவேளை பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பின் உரிமையாளரான மெட்டாவை தீவிரவாத மற்றும் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் ரஷியா சேர்த்துள்ளது.
இதனையடுத்து, இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற மெட்டா நிறுவனம் அளித்து வரும் சேவைகள் ரஷியாவில் துண்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் ரஷியாவில் தீவிரவாத நடவடிக்கையில் மெட்டா நிறுவனம் ஈடுபட்டதாக கண்டறியப்பட்டதையடுத்து, ரஷியாவின் தொழில்நுட்ப கட்டுப்பாட்டு ஆணையம், பேஸ்புக்கை தடை செய்தது. இதனால், ரஷிய அரசாங்க ஆதரவு செய்திகளை பயனர்கள் பார்ப்பதை பேஸ்புக் கட்டுப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, உக்ரைன் மற்றும் போலாந்து ஆகிய நாடுகளில் இருந்து, ரஷிய படையெடுப்பாளர்களை எதிர்த்து வன்முறைக்கு அழைப்பு விடுத்திருந்த பேஸ்புக் பதிவுகளை மெட்டா நிறுவனம் தற்காலிகமாக அனுமதித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதற்காக தொடரப்பட்ட வழக்கில், மெட்டா தரப்பில், தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று வாதாடப்பட்டது.
ஆனால் இந்த வழக்கை ஜூன் மாதம் விசாரனை செய்த மாஸ்கோ நீதிமன்றம் மெட்டாவின் மேல்முறையீட்டு மனுவை நிராகரித்தது. இந்நிலையில், இன்று மெட்டாவை தீவிரவாத மற்றும் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் ரஷியா சேர்த்துள்ளது.