இன்றைய காலகட்டத்தில் தவிர்க்கமுடியாத செயலியாக வாட்ஸ்அப் மாறிவிட்டது. உலகளாவிய சமூகத்தின் தேவைகளை தீர்க்க வாராவாரம் புதிய அம்சங்களைக் கொண்டு வந்துகொண்டே இருக்கிறது. அப்படி வரப்போகும் ஒரு அப்டேட் என்ன தெரியுமா?
தனக்கு தானே செய்தி அனுப்பிக்கொள்ளும் வசதி தான். தனக்கு தானே எதற்கு செய்தி அனுப்பி கொள்ள வேண்டும் என்று சிலர் யோசிக்கலாம். Telegram நிறுவனம் ஏற்கனவே இந்த சேவையை வழங்கி வருகிறது. அதைத்தொடர்ந்து இப்போது வாட்ஸ் அப்பிலும் இது அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
மனிதர்கள் எல்லாவற்றையும் தங்கள் மூளையில் சேமித்து வைத்துக்கொண்டே இருக்க முடியாது. அவசரத்தில் ஒரு எண்ணை சேமிக்க வேண்டும் என்றாலும் பேப்பர், பேனா கையில் இருக்காது.
இந்த மாதிரி சூழலில் யாராவது ஒருவருக்கு செய்தியாக அனுப்பி விட்டு பின்னர் அதை குறித்துக் கொள்வோம்.
இந்த மாதிரி செய்திகள் வந்தால் கண்டுகொள்ள வேண்டாம் என்று சிலரிடம் சொல்லி வைத்திருப்போம். ஒரு சிலர், சில தொடர்புகளை இது போன்ற செய்திகள் அனுபவதற்காகவே வைத்திருப்பர்.அதற்கு பதிலாக இப்போது தனக்கென்று தனி ஒரு சாட் வைத்துக்கொண்டு அதற்கு அனுப்பி சேமித்துவைத்துக் கொள்ளவே இந்த புதிய அம்சம்.
டெலெக்ராமில் saved messages என்ற தலைப்புடன் அமையும் தொடர்பில் தனக்கு தானே செய்தி அனுப்பிக்கொள்ளலாம். அது போல இப்போது வாட்ஸ்அப்பில் பயனருடைய எண் ‘me’ என்று வரும். அதில் அவர் தனது குறிப்புகளை அனுப்பி சேமித்துக் கொள்ளலாம். இது பயனர்களுக்கு பேருதவியாக இருக்கும். ஏதேனும் லிங்குகளை சேமிக்கவும் இதை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்த அப்டேட்டின் விவரங்கள் WABetainfo வழியாக வெளிவந்துள்ளன.
வாட்டசாப்பின் பீட்டா ஆண்ட்ராய்டு பதிப்பு 2.22.24.2 ஆனது இந்த புதிய மெசேஜ் அம்சத்தைக் கொண்டு வெளியிடப்படும் என்று செய்திக் குறிப்பு குறிப்பிடுகிறது.
இந்த அம்சம் தற்போதைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பீட்டா சோதனையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. இதில் ஏற்படும் சோதனை பிழைகள் சரி செய்யப்பட்டவுடன், Whatsapp அதை வரும் வாரங்களில் அனைவருக்கும் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.