Friday, January 17, 2025
HomeLatest Newsகச்சதீவை மீட்பது தொடர்பில் இந்திய துணைதூதர் வெளியிட்டுள்ள செய்தி

கச்சதீவை மீட்பது தொடர்பில் இந்திய துணைதூதர் வெளியிட்டுள்ள செய்தி

இந்திய முதலீடுகளால் வடமாகாண மக்கள் பலனை அனுபவிப்பார்கள் என இந்திய துணைத்தூதுவர் ராகேஸ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் தெரிவித்தார்.

வவுனியா பிரதேச செயலகத்தில் அட்சயபாத்ரா உதவிகள் எனும் தொனிப்பொருளில் இந்திய மக்களின் நிவாரண பொருட்களை வழங்கி வைக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

வடமாகாணத்தில் இரண்டு இலட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் நிவாரணம் கையளிக்கப்பட்டுள்ளது.

இது முதற்கட்டமான உதவியே. தமிழ்நாட்டில் இருந்தும் இந்தியாவில் இருந்தும் இன்னும் நிவாரணப்பொதிகள் வந்துகொண்டிருக்கின்றது.

அரிசி மற்றும் பால்மா இதன்போது கையளித்துள்ளோம். யாழ்ப்பாணம் தீவுப்பகுதியில் உள்ள மீனவர்களுக்கு 17000 லீற்றர் மண்ணெண்னை வழங்கி வைத்திருந்தோம்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு தேவையான மருந்துபொருட்கள் மருத்துவ உபகரணங்களும் நேற்று வழங்கி வைத்திருந்தோம். இன்னும் மருந்துகளும் மருத்துவ உபகரணங்களும் வந்துகொண்டிருக்கின்றது.

இந்த நெருக்கடியில் இருந்து வெளியில் வருவதற்கு முன்னோக்கி பார்க்க வேண்டியிருக்கின்றது. இந்தியாவில் இருந்து முதலீடு மற்றும் தொழில்வாய்ப்பு சந்தர்ப்பங்களை கொண்டு வரவும் நாம் செயற்பட்டு கொண்டிருக்கின்றோம். மிக விரைவில் இதற்கான பலனை வடமாகாணத்தில் காண்போம்.

அத்துடன் தனிப்பட்ட முறையில் சில மீனவர் சங்கத்தில் இருந்து மண்ணெண்னை கோரி கடிதங்கள் அனுப்பி வைத்துள்ளனர். அதனை உத்தியோக பூர்வமாக அரச அதிபரூடாக அல்லது வட மாகாண செயலாளர் ஊடாக தொகுத்து எடுத்து வருமாறு கோரியுள்ளோம். அவ்வாறு வந்தால் பரிசீலனை செய்யலாம்.

இதேவேளை இந்திய இலங்கை மீனவர் பிரச்சனைதொடர்பில் ஊடகவியலாளர் கேள்வி எழுப்பியபோது,

கடந்த ஒன்றரை மாதங்களாக இந்திய மீனவர்களுக்கு மீன்பிடிக்க தடை இருக்கின்றது. இந்தியாவில் ஆழ்கடலில் சென்று மீன்பிடிக்கும் உபகரணங்கள் மற்றும் கப்பல்கள் கொடுக்கப்பட்டு வருகின்றது. அதேவேளை பேச்சுவார்த்தையும் பல மட்டங்களில் இடம்பெற்று வருகின்றது. அரசியல் ரீதியிலும் இடம்பெற்று வருகின்றது.

கச்சதீவை மீட்பதென்பது உத்தியோக பூர்வமாக வரும் விடயம் அல்ல. அவை எல்லாம் பத்திரிகையில் வரும் விடயங்களாகவே இருக்கின்றது எனவும் தெரிவித்தார்

Recent News