Tuesday, December 3, 2024
HomeLatest Newsஜனாதிபதிக்கும் தமிழ் தேசிய கூட்டமைக்கும் இடையிலான சந்திப்பு இன்று நிறைவு !

ஜனாதிபதிக்கும் தமிழ் தேசிய கூட்டமைக்கும் இடையிலான சந்திப்பு இன்று நிறைவு !

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பு இன்று நிறைவடைந்துள்ளது.

நீண்ட தினங்களாக ஒத்திவைக்கப்பட்ட ஜனாதிபதி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகியிருந்தது.

இவ் வேளை தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு குறித்தே அதிக அவதானம் செலுத்தப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது .

மேலும், வடக்கு கிழக்கின் அபிவிருத்தி குறித்தும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வடக்கு கிழக்கில் வாழும் மக்களின் இன்னல்கள் தொடர்பிலும் இதன்போது ஜனாதிபதிக்கு கூட்டமைப்பினர் எடுத்துரைத்துள்ளதாகவும் அறியப்படுகிறது .

இச்சந்திப்பில், செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான டெலோ எனப்படும் தமிழீழ விடுதலை கழகம் தவிர்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக் கட்சிகள் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலதிகமாக இலங்கை தமிரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் பங்கேற்றிருந்தார்.

அதேபோன்று அரசாங்கத்தினை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ மற்றும் அலி சப்ரி ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெறுவதாக இருந்து பிற்போடப்பட்ட சந்திப்பு, கடந்த 15ஆம் திகதி இடம்பெறவிருந்தது.

எனினும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, குறித்த தினத்தில் கொழும்பில் நடத்திய போராட்டப் பேரணி காரணமாக இச்சந்திப்பானது இன்றைய தினத்திற்கு பிற்போடப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Recent News