வடஅமெரிக்க நாடான மெக்சிக்கோவின் தென்மேற்கு பகுதியை நேற்றைய தினம் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து வரும் சில நாட்களுக்கு மேற்படி சுனாமி மற்றும் நிலநடுக்க எச்சரிப்புக்கள் அமுலில் இருக்கும் என மெக்சிக்கோவின் வானிலை அவதான மையம் அறிவித்துள்ளது.
நேற்றைய தினம் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் இரண்டு பேர் மரணமடைந்துள்ளதாகவும் தென்மேற்குப் பகுதியின் தலைநகர்க் கட்டடங்கள் சில பாரிய பாதிப்பிற்குள்ளாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடலோரத்தில் இருந்து சுமார் 185 மைல் தூரத்திற்கு சுனாமி எச்சரிப்புக்கள் விடுக்கப்பட்டுள்ள நிலையில் அவசரகால நிலையும் அதிபர் “ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர்” அவர்களினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் அதிபர் தனது சமூக வலைத் தளப் பதிவில் கூறும் போது, நாம் முன்னெச்சரிக்கையுடன் தயாராக இருக்கின்றோம். மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். என தெரிவித்திருக்கின்றார்.
இதேவேளை கடந்த 1985 மற்றும் 2017ம் ஆண்டுகளில் இதேநாளில் இவ்வாறான பாரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் வரலாறுகள் கூறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.