Thursday, December 26, 2024
HomeLatest Newsரோஹிங்கியா சமூகத்தின் போராட்டத்தை ஆதரிக்கும் மலேசியா!

ரோஹிங்கியா சமூகத்தின் போராட்டத்தை ஆதரிக்கும் மலேசியா!

ரோஹிங்கியா சமூகத்தினர் மியான்மருக்கு அந்நாட்டின் குடிமக்களாக திரும்புவதற்கான போராட்டத்தை மலேசியா ஆதரிக்கிறது என மலேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் சைபுதீன் அப்துல்லா கூறியிருக்கிறார். 

சர்வதேச சமூகம் ரோஹிங்கியா மக்களின் நிலையை மறந்து விடக்கூடாது எனக் கூறியுள்ள மலேசிய அமைச்சர், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் வங்கதேசத்திலும் ஒன்றரை லட்சம் ரோஹிங்கியா அகதிகள் மலேசியாவிலும் மேலும் பல அகதிகள் பிற நாடுகளும் உள்ளதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். 

“அவர்களுக்கு குடியுரிமை மறுக்கப்படுகிறது. குற்றவாளிகளை (ரோஹிங்கியா மக்களை சித்திரவதை மற்றும் படுகொலை செய்தவர்கள) நீதியின் முன் நிறுத்துவதற்கான முயற்சிகளை ஆதரிப்பதோடு மட்டுமல்லாமல், மியான்மரில் உள்ள பிற சமூகத்தினரைப் போலவே ரோஹிங்கியாக்களும் அந்த நாட்டின் குடிமக்களாக வாழ்வதற்கான அவர்களது முயற்சிகளையும் போராட்டத்தையும் நாங்கள் ஆதரிக்கிறோம்,” என அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். 

ரோஹிங்கியா மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையின் ஐந்தாம் ஆண்டு நினைவு அனுசரிக்கப்படும் நிலையில் மலேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹிங்கியா சமூகத்துக்கு ஆதரவாக குரல் எழுப்பியிருக்கிறார். 

மியான்மரில் பல்வேறு விதமான அரசு/ராணுவ அடக்குமுறைகள் மற்றும் வன்முறை தாக்குதல்களுக்கு உள்ளாகி வரும் ரோஹிங்கியா மக்கள் அந்நாட்டிலிருந்து வெளியேறி வங்கதேசம், மலேசியா, இந்தோனேசியா, இந்தியா ஆகிய நாடுகளில் தஞ்சம் கோருவது தொடர் நிகழ்வாக இருந்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கடந்த 2017 ம் ஆண்டு சுமார் 7 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கியா மக்கள் மியான்மரிலிருந்து அகதிகளாக வெளியேறியிருந்தனர்.

Recent News