Friday, November 15, 2024
HomeLatest Newsபெரும்பான்மை காட்டுவதில் சந்தேகம்: வாக்கெடுப்பிற்கு வருகிறது 22வது திருத்தம்!

பெரும்பான்மை காட்டுவதில் சந்தேகம்: வாக்கெடுப்பிற்கு வருகிறது 22வது திருத்தம்!

மூன்றில் இரண்டு பெரும்பான்மை கட்டுவதில் சந்தேகம் இருந்தாலும் இந்த வாரம் 22வது திருத்தச் சட்டமூலம் மீதான நாடாளுமன்ற விவாதம் மற்றும் வாக்கெடுப்பை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஆளும்கட்சி உறுப்பினர்களின் ஆட்சேபனையை கருத்திற்கொள்ளாமல் முன்மொழியப்பட்ட 22வது திருத்தத்தை முன்னெடுத்துச் சென்று வாக்கெடுப்புக்குச் செல்ல அமைச்சரவை கடந்த வாரம் அனுமதி வழங்கியதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

இதன்படி, 22ஆவது திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 20 ஆம் திகதி வியாழக்கிழமை விவாதத்துக்கும், 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வாக்கெடுப்புக்கும் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

எவ்வாறாயினும் அரசியல் சீர்திருத்தங்களுக்கு யார் எதிர்ப்பை தெரிவிக்கின்றார்கள் என்பதை வாக்கெடுப்பின் மூலம் பொதுமக்கள் வெளிப்படையாக அறிந்துகொள்ளலாம் என்றும் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

கடந்த நாடாளுமன்ற அமர்வின் போது எதிர்க்கட்சிகள் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தில் ஜனநாயக விரோத திருத்தங்களை முன்வைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கவலை தெரிவித்திருந்தன.

எவ்வாறாயினும், உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைகள் மற்றும் எதிர்க்கட்சிகளால் முன்மொழியப்பட்ட சில விடயங்கள் மட்டுமே குழுநிலையின் போது திருத்தங்களாக மாற்றப்படும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

Recent News