பாடசாலை மாணவர்களுக்கு மதிய நேர உணவை வழங்குவதற்கு தங்களால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்வதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன் தரம் ஒன்று மற்றும் இரண்டுக்கான ஆரம்பக் கல்வியை இழந்து மூன்றாம் ஆண்டுக்கு சென்றுள்ள பாடசாலை மாணவர்களின் தகைமை குறித்து பரிசோதனை நடத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாளை முதல் 5ஆம் திகதி வரையான 5 நாட்களில் 3 நாட்களுக்கு மாத்திரம் பாடசாலை கற்றல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி, திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன்கிழமைகளில் பாடசாலை செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மாணவர்கள் வீட்டில் இருந்து கற்றல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் அல்லது இணையவழி கற்பித்தல் முறைமையில் ஈடுபடுவதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
எனினும் போக்குவரத்து பிரச்சினை இல்லாத பாடசாலைகளின் செயற்பாடுகளை புதன் மற்றும் வெள்ளி கிழமைகளில் முன்னெடுப்பது தொடர்பில் அதிபர்கள் மற்றும் ஆசியர்களின் இணக்கப்பாட்டுடன் வலய கல்வி பணிப்பாளரின் அனுமதிக்கு அமைய தீர்மானிக்க முடியும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.