2023ஆம் ஆண்டு இலங்கையில் விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்பவர்களை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த விவசாய அமைச்சு திட்டமிட்டுள்ளது.
இதன்படி, இலங்கையில் விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்யும் தொழில் முயற்சியாளர்கள் குழுவுடன் நேற்று அமைச்சர் மஹிந்த அமரவீர கலந்துரையாடலை முன்னெடுத்துள்ளார்.
பல நாடுகள் விவசாய உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்வதில் ஈடுபட்டு பெருமளவிலான அந்நியச் செலாவணியை ஈட்டுவதாகவும், அதேவேளை நாட்டில் விவசாயப் பொருட்களின் ஏற்றுமதி மிகக் குறைந்த அளவிலேயே இருப்பதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
சர்வதேச சந்தையின் தரத்தை பூர்த்தி செய்யத் தவறியமைக்கான முக்கிய காரணத்தை அமைச்சர் அமரவீர எடுத்துரைத்தார்.
எனவே, ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட விவசாயப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான அதிகபட்ச வசதிகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அதன்படி, 2023 வரவு -செலவுத் திட்டத்தில் ஏற்றுமதி விவசாயத் துறையை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் எள், பச்சை பீன்ஸ், சோயா பீன்ஸ், காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்ற தானியங்களுக்கு சர்வதேச சந்தையில் கணிசமான தேவை நீடித்து வருவதாக அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், தேவைக்கு ஏற்ற விநியோகத்தை இலங்கை இன்னும் பூர்த்தி செய்யவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
வெளிநாட்டு சந்தைக்கு வாழைப்பழம் ஏற்றுமதி செய்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
2021 ஆம் ஆண்டு விளைச்சல் தோல்வியடைந்ததால், 2022 ஆம் ஆண்டு அரிசி இறக்குமதிக்காக அரசாங்கம் 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டதாகவும், 2023 ஆம் ஆண்டு ஒரு அரிசி தானியத்தையும் இறக்குமதி செய்யப்போவதில்லை என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.