அரசாங்கத்தை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட காலிமுகத்திடல் மக்கள் போராட்டத்தை தடுத்து நிறுத்த முயற்சிக்கும் எவராக இருந்தாலும், அவருக்கு எதிராக குரல் கொடுக்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக நாடாளுன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட இந்த மக்கள் போராட்டத்திற்குள் இலங்கையின் அரசியல் கலாசாரத்தை மாற்றக் கூடிய சாதகமான பல அடையாளம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காலிமுகத்திடல் மக்கள் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 50 நாட்கள் நேற்று பூர்த்தியானதை முன்னிட்டு, ஐக்கிய மக்கள் சக்தி நடத்திய பந்தம் ஏந்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
காலிமுகத்திடல் போராட்டத்தில் பல அடையாளங்கள் இருக்கின்றன. நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய அடையாளங்கள், மக்களுக்கு பொறுப்புக் கூறும் நாடாளுமன்றத்தை உருவாக்கும் அடையாளங்கள்.
நாட்டின் அரசியல் கலாசாரத்தை மாற்றும் அடையாளங்கள் இருக்கின்றன. இந்த அடையாளங்களை நாங்களும் ஏற்றுக்கொள்கிறோம்.
இந்த போராட்டத்தை வெற்றியை நோக்கி கொண்டு செல்ல வேண்டும். போராட்டத்திற்கு எதிரான சக்திகள், போராட்டத்தை தடுத்து நிறுத்த மேற்கொள்ளும் முயற்சிகளை நாம் தோற்கடிக்க வேண்டும் எனவும் முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவித்துள்ளார்.