முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சிங்கப்பூர் விஜயம் நாளை (11) காலாவதியாகவிருந்த நிலையில், அவர் மேலும் சில வாரங்கள் தங்குவதற்கு விசா வசதிகளை வழங்குமாறு இலங்கை அரசாங்கம் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வ கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று, கோட்டாபய ராஜபக்சவுக்கு சிங்கப்பூர் அரசு முழு பாதுகாப்புடன் குடியிருப்பு வசதிகளை செய்து கொடுத்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
எவ்வாறாயினும், சிங்கப்பூரில் மிகவும் வசதியான ஹோட்டலில் கோட்டாபய ராஜபக்ச தங்கியிருப்பதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பொய்யானாது எனவும், எனினும் அவர் மிகவும் பாதுகாப்பான இடத்தில் தங்கியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கையிலிருந்து கோட்டாபய ராஜபக்ச வெளியேறிய பிறகு, சிங்கப்பூர் அரசாங்கம் 14 நாட்களுக்கு நாட்டில் தங்கியிருக்க அவருக்கு அனுமதி அளித்தது.
கோட்டாபய ராஜபக்ச மறைந்திருக்கவில்லை என்றும், அவர் சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் இலங்கையின் அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் கலாநிதி பந்துல குணவர்தன கூறியிருந்தார்.
73 வயதான கோட்டாபய ராஜபக்ச, தனது அரசாங்கத்தின் பொருளாதார முறைகேடுகளுக்கு எதிரான மக்கள் எழுச்சியிலிருந்து தப்பிக்க தனது நாட்டை விட்டு வெளியேறிய பின்னர் மாலைதீவில் இருந்து தனிப்பட்ட பயணமாக ஜூலை 14 அன்று சிங்கப்பூர் சென்றார்.
அவர் முதலில் ஜூலை 13ம் திகதி மாலைதீவிற்கு சென்று அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.