Friday, January 17, 2025
HomeLatest Newsஜூன் 05: இன்று உலக சுற்றாடல் தினம்

ஜூன் 05: இன்று உலக சுற்றாடல் தினம்

காடுகளை அழிப்பதால் புவியில் உயிரினங்களின் எதிர்கால இருப்புக்கு உருவாகி வரும் பேராபத்து!

  • சுற்றாடல் பாதுகாப்புக்கு நாம் ஒவ்வொருவரும் பங்காளிகளாவோம்!

ஐக்கிய நாடுகள் சபையானது ஒவ்வொரு வருடமும் புவிக்கோளையும் அதன் இயற்கையையும் பாதுகாப்பதற்காக ஒவ்வொரு வருடத்தின் ஜூன் 5 ஆம் திகதியை உலக சுற்றாடல் தினமாகப் பிரகடனப்படுத்தி அதை கொண்டாடி வருகின்றது. இத்தீர்மானம் கடந்த 1972 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டு 1974 ஆம் ஆண்டு முதன் முறையாக ‘பூமி ஒன்று மட்டுமே’ எனும் கருப் பொருளில் சுவீடனில் கொண்டாடப்பட்டது.

ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு கருப்பொருளுடன் ஒவ்வொரு நாடும் பிரதான நிகழ்வை பொறுப்பேற்று நடத்தி வருகிறது. 2022 ஆம் ஆண்டை சுவீடன் நாடு ‘பூமி ஒன்று மட்டுமே’ எனும் அதே கருப்பொருளில் நடத்துவதாக பிரகடனப்படுத்தி கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வு உலகின் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது.

பெருகிவரும் மக்கள் தொகை மற்றும் நகரமயமாக்கல், வேளாண்மை, விவசாயம் போன்ற காரணங்களினாலும் அதிகரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் இருந்து வெளியாகும் பெருமளவான புகை, கழிவுகள் அனைத்தும் காற்று மண்டலத்திலும், நிலத்திலும், ஆறு, கடல்களிலும் கலந்து சுற்றுச் சூழலை பாதிப்படையச் செய்கின்றன. மேலும் மக்கள் உறைவிடங்கள் அமைப்பதற்காகவும் அவற்றுக்குரிய போக்குவரத்து பாதைகளை அமைப்பதற்காகவும் காடுகளை ஊடறுத்து செல்லக் கூடிய வீதிகள் அமைக்கப்படுவதனாலும் அருகாமையில் உள்ள காட்டு நிலப்பரப்புகள் அழிக்கப்படுகின்றன.

புகையினால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை விஞ்ஞானிகள் அறிவுறுத்துவது ஒருபுறமிருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வரும் கடுமையான வெயிலின் தாக்கமும் திடீரென்று பெய்யும் கடும் மழையும் அதனால் விளையும் பெருவெள்ளம் இயற்கையில் ஏதோ ஒழுங்கற்ற தன்மை உருவாகி வருவதை சூசகமாக உணர்த்துகின்றன.காடழிப்பு உலகம் முழுவதும் நடைபெற்று வருகின்றது. இதனால் உலகில் இன்று பலவிதமான காலநிலை மாற்றங்களும் சூழல் சுற்றாடல் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. காடுகளின் நன்மைகள், காடழிப்புக்குரிய காரணங்கள், காடழிப்பினைக் கட்டுப்படுத்தல் போன்ற விடயங்கள் ஆராயப்பட வேண்டியவையாகும்.

உலக வெப்பமயமாதல் எனும் பிரச்சினையால் பனிப்பாறைகள் உருகி கடல்மட்டம் உயர்வதால் சில நாடுகள் நீரில் மூழ்கும் அச்சுறுத்தல் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. நிலத்தடி நீர் பற்றாக்குறையால் தண்ணீர் பஞ்சமும் பல இடங்களில் ஏற்படவுள்ளது.

சுற்றுச்சூழலைக் காக்க இந்த உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனும் முன்வர வேண்டியது அவசியமானது. இந்த உலகில் மனிதன் மட்டும்தான் உள்ளானா? இல்லை விலங்குகளும் பறவைகளும் கூட வாழ்கின்றன. ஆனால் மனித இனத்தை தவிர வேறெந்த உயிரினத்தாலும் சுற்றுச்சூழலுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை.

காடு வளர்த்தலின் நன்மைகள்:

சூழல் மாசடைதலைத் தடுத்தல், காபனீரொட்சைட்டின் அளவைக் குறைத்தல், ஒட்சிசனின் அளவை அதிகரித்தலில் காடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. தாவரங்கள் ஒளித்தொகுப்பு நடவடிக்கைக்காக காபனீரொட்சைட்டை எடுத்து ஒக்சிஜனை வெளிவிடுகின்றன. இதனால் வளிமண்டலத்தில் பல்வேறு வீதங்களில் வெளியேறும் காபனீரொட்சைட்டு உறிஞ்சிக் கொள்ளக் கூடிய விதத்தில் செயற்கை மரங்கள் உருவாக்கப்படுகின்றன. இம்மரங்கள் இயற்கையான தாவரங்கள் போன்று உயிர்க்கலங்களை கொண்டிருக்கா விட்டாலும் மரங்களின் செயற்பாட்டை அடிப்படையாகக் கொண்டே தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மழையை பெறத் துணை செய்தல்:

ஆவியுயிர்ப்பு தொழிற்பாட்டின் மூலம் வளிமண்டலத்தில் நீராவியின் செறிவை அதிகரிக்கச் செய்வதுடன் உயர்ந்த காடுகள் காற்றுகளைத் தடுத்து மழைவீழ்ச்சியைக் கொடுக்கின்றன. அண்மையில் இலங்கையின் நடைபெற்ற மாநாட்டில் மழைவீழ்ச்சி குறைவடைந்தமைக்கு காடுகள் பயிர்சிசெய்கைக்காக அழிக்கப்பட்ட மையும் ஒரு காரணமாக கருதப்பட்டு உப உணவுப் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படுகின்ற பகுதிகளில் காடுகளை வளர்ப்பதுடன் பயிர்ச்செய்கைக்கு வடக்கு, கிழக்கிலுள்ள காடுகள் செறிவற்ற பகுதிகளில் மேற்கொள்ளப்படல் வேண்டும் என்ற கருத்தும் கூறப்பட்டது.

காடுகள் எரிபொருளாக பயன்படல், தளபாடங்களுக்குரிய மூலப்பொருளாக பயன்படல், மருந்துகளாக பயன் படல் மற்றும் உணவுகளை வழங்கல் என பல்வேறு பயன்பாடுகள் உடையதாக காணப்படுகின்றன. பெரும்பாலான வளர்முக நாடுகளில் எரிபொருளாக விறகே பயன்படுத்தப்படுகின்றது. வீடுகளுக்குரிய கதவுகள், கூரைகள், தளபாடங்கள் செய்வதற்கும் மரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் அரிய பல மருந்து வகைகளையும் காடுகளே கொண்டுள்ளன. உதாரணமாக ஆயுர்வேத வைத்தியத் துறைக்குத் தேவையான மருந்துகளை தன்னகத்தே சேமித்து வைத்துள்ள தாவர பட்டைகள், இலைகள், விதைகள் போன்றன இன்று ஆயுர்வேத வைத்தியத்தில் பயன்படுத்தப்படுகின்றன.

உயிர்ப் பல்வகைமையைப் பாதுகாத்தல்:-

தாவரப் போர்வை மிக்க பிரதேசங்கள் உயிரினப் பல்வகைமை அதிகளவில் கொண்டனவாக காணப்படுகின்றன. மிருகங்கள் முதல் ஊர்வன வரை ஒரு காட்டு சூழல் தொகுதியில் இனங்காண கூடியனவாக உள்ளன. விலங்குகள் பறவைகளின் புகலிடங்களாக காடுகள் காணப்படுகின்றன. பூமியில் நிலப்பரப்பில் மழைக்காடுகள் 7 சதவீதம் மாத்திரமே உள்ள போதிலும் உலகில் வாழும் உயிரினங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை காடுகளிலேயே காணப்படுகின்றன.

காடுகளினால் மண்ணரிப்பு, வரட்சி, மண்சரிவு போன்றவை குறைவடைகின்றன. தாவரங்கள் நிலத்திற்கு போர்வையாக அமைகின்றமையால் பெருமளவில் நீர் ஆவியாவதை தடுப்பதுடன் மண்ணின் ஈரத்தன்மையையும் பாதுகாக்கின்றது.

காடுகள் காணப்படுகின்ற பகுதிகளில் மழை நீரானது பெருமளவில் கழுவு நீராட்டமாக செல்வதனை பாதுகாத்து தரைக்கு கீழே பொசிவுநீராக செல்வதற்கு தாவரங்கள் துணைபுரிகின்றன. இதனால் தரைக்கீழ் நீர்வளம் பாதுகாக்கப்படுகின்றது. பெரும்பாலான நதிக் கரையோரங்களில் மதுர போன்ற தாவரங்கள் காணப்படுவதனால் அவை வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்தி வெள்ளப்பெருக்கு அணைகள் போன்று தொழிற்படுகின்றன.

காடுகள் ஒரு பிரதேசத்தின் இயற்கை அழகு மூலங்களாக காணப்படுகின்றன. பச்சைப் பசேலென காட்சியளிக்கும் காடுகள் கண்ணுக்கு குளிர்ச்சியையும், பிரதேசத்துக்கு அழகையும் கொடுக்கிறது. மரத்தின் இலைகள், தொங்குகின்ற பழங்கள், அழகான பூக்கள் எல்லாம் இயற்கை அழகை பார்ப்பவர்களுக்கு வழங்குகின்றன. கட்டடங்களாலே நிரம்பி வழிகின்ற நகர மக்கள் காடுகளின் அழகை பார்த்து ரசிக்கின்றனர். இதனால் நாட்டின் சுற்றுலாத்துறையும் வளர்ச்சியடைகின்றது.

காடுகளை அழிப்பதால் காபனீரொக்சைட் வளிமண்டலத்தில் அதிக அளவில் சேருகின்றது. இதனால் பல்வேறு தீங்குகள் ஏற்படுகின்றன. அதிக மழை அல்லது வரட்சியால் பயிர் விளைச்சல் பாதிக்கப்படும். குளிர் பிரதேசங்களில் பயிர்களின் வளர்ச்சிப் பருவம் அதிகரிக்கின்றது. பூச்சி மற்றும் நோய்களின் தாக்குதல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. காபனீரொக்சைட் வாயு அதிகரிப்பதால் உற்பத்தித் திறன் அதிகரித்து பயிர்கள் அதிக அளவு சத்துக்களை மண்ணிலிருந்து எடுத்துக் கொள்ளும். இதனால் மண்வளம் குறையலாம்.

பூமி வெப்பமடைவதால் நுளம்புகளின் வாழ்நாள் மற்றும் இனவிருத்தியின் அளவு அதிகரிக்கிறது. இதனால் மலேரியா போன்ற நோய்கள் பரவுகின்றன. பக்டீரியா மற்றும் பங்கசுக்கள் வளர்வதற்கு உகந்த நிலை ஏற்படுதலால் விளைபொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் சேதமடைகின்றன. வளிமண்டலத்தின் ஓசோன் படலம் சிதைவதால் தோல் புற்றுநோய்கள் அதிகம் ஏற்படும். கடலோரப் பகுதிகளில் உப்புநீர் உட்புகுவதால் நிலத்தடி நீர் உவர்ப்புத் தன்மையாக மாறும்.

எனவே காடுகள் அழிவதை முழுவதுமாகத் தடுக்க வேண்டும். காடழிப்பானது மேய்ச்சல் நிலங்களை உருவாக்குவதற்கு அல்லது வேளாண்மை நிலங்களை உருவாக்கும் நோக்குடன் நடைபெறுகிறது.தொழிற்புரட்சிக்குப் பின்னர் நகரமாக்கமும் காட்டு வளங்களின் சுரண்டலும் இதனுடன் சேர்ந்து கொண்டன. பொதுவாக குறிப்பிடத்தக்க பரப்பளவு கொண்ட காடுகளை அழிப்பது உயிரியற் பல்வகைமையை (Biodiversity குறைத்து சூழலையும் தரம் குறைத்து விடுகின்றது.

காட்டுவளங்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள்:-

காடழிப்பை சட்டத்தினால் கட்டுப்படுத்தல், காடுகளின் முக்கியத்துவம் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வூட்டுதல், காடுகள் அழிக்கப்பட்ட இடங்களில் மீள்காடாக்கல் செய்வதும் புதிய காடுகளை உருவாக்குவதும், மரஎரிபொருளுக்குப் பதிலாக பிரதியீட்டுப் பொருட்களைப் பயன்படுத்தல், காட்டுத்தீ பரவுதலை கட்டுப்படுத்தல், சனத்தொகை அதிகரிப்பினால் ஏற்படும் காடழிப்பைத் தடுக்க முறையான திட்டத்தை வகுத்தல், கடற்கரையோர கண்டல் தாவரங்களை பாதுகாத்தல்.

எனவே நாம் ஒவ்வொருவரும் சுற்றாடல் பாதுகாப்புக்கு பங்களிப்பு செய்தல் வேண்டும். எமது ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் ஞாபகார்த்தமாக மரங்களை நடுவோம், மேலும் பொது இடங்களான புத்தவிகாரைகள், கோவில்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் போன்ற மதத் தலங்களிலும், பாடசாலைகள், அலுவலகங்கள், தரிசு நிலங்கள், வீதி ஓரங்கள் போன்ற இடங்களிலும் மரங்களை நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆகக் குறைந்தது வாழ்நாளில் ஒரு மரத்தையாவது நட்டு உலக சுற்றாடல் பாதுகாப்புக்கு ஒவ்வொருவரும் ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும்.

Recent News