ஆப்பிரிக்க நாடான சூடானில் தற்போது ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. அங்கு திருட்டு, விபசாரம் உள்ளிட்ட குற்றங்களுக்கு கைகளை துண்டித்தல், கல்லால் அடித்து மரண தண்டனை நிறைவேற்றுதல் போன்ற கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன.
இந்த நிலையில் அங்குள்ள ஒயிட்நைல் மாகாணத்தை சேர்ந்த, திருமணமாகி விவாகரத்தான 20 வயது இளம்பெண், வாலிபர் ஒருவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார்.
இந்த சூழலில் அவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்ததை பார்த்த அப்பெண்ணின் உறவுக்காரர் ஒருவர் ஆத்திரத்தில் அந்த வாலிபரை கொலை செய்தார்.
இதனையடுத்து திருமணத்துக்குப்பின் கணவர் அல்லாத மற்றொரு ஆணுடன் நெருக்கமாக இருந்ததால் அந்த பெண் மீது விபசார வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனை விசாரித்த கோர்ட்டு அந்த பெண்ணை கல்லால் அடித்து மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவிட்டது. இதற்கு சர்வதேச அளவில் எதிர்ப்புகள் வலுத்ததை தொடர்ந்து, தண்டனை வாபஸ் பெறப்பட்டு வழக்கு மறுவிசாரணை செய்யப்பட்டது.
விசாரணையில் அந்த பெண் தனது காதலனுடன் நெருக்கமாக இருந்தபோது முத்தமிட்டதை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.