யாழ்ப்பாணத்தில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக 2023 ஜனவரிக்கு முன்னர் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திப்பதற்கு 2500 குடும்பங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
யாழ்ப்பாணத்தின் வலிகாமம்-வடக்கில் மயிலிட்டி மற்றும் பலாலியில் உள்ள காணிகள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
மயிலிட்டி துறைமுகத்தை கடற்றொழில் மக்களின் வாழ்வாதாரத்திற்கு பயன்படுத்த முடியும்.
பலாலி பிரதேசத்தை விவசாயத்தில் ஈடுபடும் குடும்பங்கள் பயன்படுத்த முடியும்.
எனினும் அந்த காணிகளை மீள்குடியேற்றத்திற்கு விடுவித்தால் மட்டுமே இது சாத்தியமாகும் என்று வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றத்தின் தலைவர் அருணாசலம் குணபாலசிங்கம் தெரிவித்தார்.
வலிகாமம்-வடக்கு மீள்குடியேற்றக் குழுவின் கூற்றுப்படி, 1990 இல் இலங்கை இராணுவத்தினரால் சுமார் 6,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
3500 ஏக்கர் காணிகள் உரியவர்களிடம் விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் காங்கேசன்துறை, கீரிமலை, வறுத்தலவிளான் மற்றும் கட்டுவன் ஆகிய பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் காணிகள் இன்னமும் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாக குணபாலசிங்கம் தெரிவித்தார்.
மீதமுள்ள 3,000 ஏக்கர் நிலம் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஜனாதிபதி விக்கிரமசிங்கவை நேரில் சந்தித்து தமது குறைகளை விளக்குவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாக குணபாலசிங்கம் தெரிவித்தார்.