Saturday, April 20, 2024
HomeLatest Newsயாழ்ப்பாணம் - இந்தியா கப்பல் சேவை கட்டணம் வெளியானது ! 

யாழ்ப்பாணம் – இந்தியா கப்பல் சேவை கட்டணம் வெளியானது ! 

இந்தியாவின் புதுச்சேரியில் உள்ள காரைக்கால் துறைமுகத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான படகுச் சேவை எதிர்வரும் ஏப்ரல் 29 முதல் ஆரம்பமாகும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

காரைக்கால் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை, துறைமுகத்துக்கு குறித்த தினத்தில் புதிய படகு சேவையின் முதல் படகு வருகைதரும் என்றார்.

அமைச்சில் அண்மையில் இடம்பெற்ற இந்த புதிய படகுச் சேவையின் பங்குதாரர்களுடனான கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

படகுச் சேவை உரிமையாளர்களின் கூற்றுப்படி, ஒரு பயணத்திற்கு பயணியொருவரிடமிருந்து 50 அமெரிக்க டொலர் அறவிடப்படுவதுடன், 100 கிலோகிராம் பொருட்களை கொண்டுவர அனுமதிக்கப்படும்.

ஒரு படகு ஒரே தடவைகளில் 150 பயணிகளை ஏற்றிச் செல்லும். காரைக்கால் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு, 4 மணிநேரத்தில் காங்கேசன்துறையை வந்தடையும்.

முதல் கட்ட நடவடிக்கைகளின்போது பகல் நேரங்களில் மட்டுமே சேவை முன்னெடுக்கப்படும்.

காங்கேசன்துறை துறைமுகத்தின் விஸ்தரிப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

இந்த கட்டுமானங்களுக்கு தற்போது இந்தியாவினால் வழங்கப்படும் கடன் மானிய வசதி போதுமானதாக இல்லாததால், இந்தியாவிடம் மேலதிகமாக 16 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் வசதி கோரப்பட்டுள்ளது” என்று அமைச்சர் கூறினார்.

Recent News