தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையினால், யாழ். போதனா வைத்தியசாலை இரத்த வங்கியும் ஆபத்தான நிலைக்கு தள்ளப்டுள்ளது.
மேற்படி இரத்த வங்கியில் கையிருப்பில் இருக்க வேண்டிய குருதியின் அளவு 330 பைந்த் ஆகும். ஆனால் தற்போது இரத்த வங்கியிலிருக்கும் குருதியின் அளவு 173 பைந்த் ஆகுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.
தினமும் 35 முதல் 40 பைந்த் குருதியானது, பல்வேறுபட்ட சிகிச்சைகளுக்காக எமது இரத்த வங்கியிலிருந்து நோயாளர்களுக்கு விநியோகிக்கப்படுகின்றது .
இந்த அடிப்படையில் கையிருப்பிலிருக்கும் குருதியானது இன்னும் ஐந்து நாட்களுக்கு மட்டுமே போதுமானது. இது மிகவும் ஆபத்தான நிலையாகும்.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டினால், இரத்த வங்கிக்கும் இரத்ததான முகாமுக்கும் இரத்ததானம் செய்ய வருவோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.
இதனால் இரத்த வங்கியில் அனைத்து வகையான குருதி வகைகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளர்களுக்குத் தேவையான குருதியினை விநியோகிக்க முடியாத நிலைக்கு இரத்த வங்கி தள்ளப்பட்டுள்ளது.
ஆகவே உங்கள் இடங்களில் இரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்வதன் மூலம், அருகிலுள்ள இரத்த வங்கிக்குச் சென்று இரத்ததானம் செய்வதன் மூலம், ஏற்பட்டுள்ள குருதித்தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்வதுடன், குருதித்தானம் குறித்த மேலதிக தகவல்களுக்கு 077 2105375 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறும், யாழ் போதனா வைத்திய சாலை இரத்த வங்கிப்பிரிவு அறிவித்துள்ளது.