காஸாவின் மிகப் பெரிய மற்றும் முக்கிய மருத்துவமனையான அல்-ஷிஃபாவில் இஸ்ரேல் படையினா் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக அந்த மருத்துவமனையில் செயல்பாடுகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டது.
இதனால் இஸ்ரேல் குண்டுவீச்சில் படுகாயமடைந்து அந்த மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டவா்கள் உடனடியாக உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடா்பாளா்
அஷ்ரஃப் அல்-கீத்ரா சனிக்கிழமை கூறியதாவது:
இஸ்ரேல் படையினரின் தாக்குதலுக்குள்ளாகியிருக்கும் அல்-ஷிஃபா மருத்துவனையின் செயல்பாடுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. அங்கு எரிபொருள் கையிருப்பு முற்றிலும் தீா்ந்துவிட்டது. அதனால் அந்த மருத்துவமனையில் ‘ஜெனரேட்டா்’கள் இயங்காமல் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, ‘இன்குபேட்டரில்’ வைக்கப்பட்டிருந்த ஒரு சிசு உயிரிழந்தது.
காஸா சிட்டியிலுள்ள மற்றொரு மருத்துவமனையான அல்-காத் மருத்துவமனையில்,
தொலைவில் மறைந்திருந்து துல்லியமாக துப்பாக்கியால் சுடும் இஸ்ரேலியப் படையினா் நுழைந்துள்ளதாகவும், அவா்களது தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்ததாகவும் சா்வதேச செம்பிறைச் சங்கம் கூறியது.
இந்தச் சூழலில், இஸ்ரேல் தாக்குதலின் விளைவாக முக்கியத்துவம் வாய்ந்த அல்-ஷிஃபா மருத்துவமனையின் செயல்பாடு முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டதாக காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் தற்போது அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே, அந்த மருத்துவமனையின் கீழே ஹாமாஸ் அமைப்பினா் தங்களது தலைமையகத்தை அமைத்துள்ளதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டியதும் குறிப்பிடத்தக்கது.
அத்தோடு எரிபொருள் பற்றாக்குறை மற்றும் மின் தடை காரணமாக அல்-குட்ஸ் மருத்துவமனையும் இனி செயல்படாது என்று பாலஸ்தீன ரெட் கிரசண்ட் சொசைட்டி (PRCS) அறிவித்துள்ளது.