வடக்கு மற்றும் தெற்கு காசா பகுதி முழுவதும் தற்போது இஸ்ரேல் படையினர்
அதிரடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். கான்யூஸ் நகரம் இஸ்ரேல் தாக்குதலால் சின்னாபின்னமாகி விட்டது.
தற்போது இஸ்ரேல் படையினர் தெய்ர்-அல்-பலா நகரை நோக்கி முன்னேறி வருகிறது.
இங்குள்ள ஒரு வீட்டின் மீது குண்டுகள் வீசப்பட்டதால் அங்கு தஞ்சம் அடைந் திருந்த
பெண்கள், சிறுவர்கள் உள்பட 34 பேர் பலியாகி விட்டனர்.
இடைவிடாத தாக்குதல் நடந்து வருவதால் போரில் இறப்பவர்கள் எண்ணிக்கை
தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை காசாவில் 16 ஆயிரத்து 200 பேர் உயிர் இழந்து உள்ளனர். 42 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்து உள்ளனர்.
காசாவில் தவிக்கும் பொதுமக்களுக்கு எகிப்து எல்லை ரபா வழியாக நிவாரண
பொருட்கள் லாரி போன்ற வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் இந்த பகுதி அமைந்துள்ள தெற்கு காசாவிலும் இஸ்ரேல் ஆக்ரோஷத்துடன் தாக்கி
வருவதால் நிவாரண பொருட்கள் வரும் வாகனங்களால் பொதுமக்கள் இருக்கும் பகுதிக்கு வர முடியவில்லை. இதன் காரணமாக நிவாரண பொருட்கள் எதுவும் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள்.
ஏற்கனவே குறைந்த அளவிலேயே உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள்
கிடைத்து வரும் சூழ்நிலையில் தற்போது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்
மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது.