Thursday, December 26, 2024
HomeLatest Newsதந்தை இருக்கிறாரா? இல்லையா? பிரான்சில் நீதிக்காய் அணிதிரள தமிழர் அமைப்புக்கள் அழைப்பு!

தந்தை இருக்கிறாரா? இல்லையா? பிரான்சில் நீதிக்காய் அணிதிரள தமிழர் அமைப்புக்கள் அழைப்பு!

தந்தை இருக்கிறாரா? இல்லையா? என நீதிக்காய் போராடும் சிறுமி போல், கடந்த 2 ஆயிரம் நாட்களுக்கு மேலாக காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என நீதிகோரி போராடும் தாய்மார்களுக்கு துணையாக அணிதிரளுமாறு பிரான்ஸ் தமிழர் அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளன.

சிறிலங்கா அரசினால் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி, தாய்மார்களின் நீதிக்கான போராட்டமானது, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளான ஓகஸ்ட்-30 செவ்வாயன்று தமிழர் தாயகத்தில் இடம்பெறவுள்ளது.

முக்கியமான இந்த அனைத்துலக நாளில் தாயகத்தின் நீதிக்கான போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் புலம்பெயர் நாடுகளிலும் போராட்டங்கள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனொரு அங்கமாக பிரான்சில் தலைநகர் பரிசின் Boulevard du Montparnasse பகுதியில் இருந்து மதியம் 2 மணிக்கு தொடங்குகின்ற நீதிக்கான பேரணி, நாடாளுமன்ற முன்றலை சென்றடையவுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களின் அரங்காக நாடாளுமன்ற முன்றில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளது ஒளிப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட இருக்கின்றன.

நீதிக்காய் போராடும் தாய்மார்களின் நீதிக்கான போராட்டத்துக்கு வலுச்சேர்க்க பிரான்ஸ் வாழ் தமிழர்களை இந்நாளில் அணிதிரளுமாறு அன்புரிமையோடு அழைப்பு விடுப்பதாக C’est Nous les Tamouls, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தமிழீழ மக்கள் பேரவை, போராளிகள் கட்டமைப்பு, தமிழீழ அரசியல்துறை – பிரான்ஸ் உட்பட தமிழர் அமைப்புக்கள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன.

தமிழர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்டமையானது, ஈழத்தமிழர்களுக்கு எதிரான சிறிலங்காவினது இனவழிப்பு மூலோபாயத்தின் ஓர் பகுதியாக இருப்பதோடு, இது தொடர்பில் அனைத்துலக விசாரணை வேண்டும் என்பதோடு, அனைத்துல குற்றவியல் நீதிமன்றத்தில் சிறிலங்கா அரசாங்கம் குற்றவாளிகள் நிறுத்தப்பட வேண்டும் என்பது தமிழர்களின் கோரிக்கையாகவுள்ளது.

Recent News