இந்திய கடற்படை கப்பலான ஐ.என்.எஸ் ‘டெல்லி’ உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கையின் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்தக் கப்பலுக்கு கடற்படை பாரம்பரியங்களுக்கு அமைய வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளின் இராஜதந்திர பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பின்னணியில், இந்தியா தனது கடற்படை கப்பலை இலங்கைக்கு அனுப்பியுள்ளது.
ஐ.என்.எஸ் ‘டெல்லி’ என்ற இந்திய கடற்படையின் கப்பல் 390 பணியாளர்களுடன் இலங்கையை வந்தடைந்துள்ளது.
163.2 மீற்றர் நீளமுள்ள இந்தக் கப்பலுக்கு கப்டன் ஷிராஸ் ஹுசைன் அசாத் தலைமை தாங்குகிறார்.
இந்த நிலையில் கிழக்கு கடற்படை தலைமையகத்தில் வைத்து கிழக்கு கடற்படை கட்டளை அதிகாரி மற்றும் தொண்டர் கடற்படை படையின் படைத் தலைவரான ரியர் அட்மிரல் தம்மிக்க குமாரவை ஐ.என்.எஸ் ‘டெல்லி’ கப்பலின் கட்டளை அதிகாரி நாளை சந்திக்கவுள்ளார்.
கப்பல் இலங்கையில் தரித்துநிற்கும் காலத்தில், இரு கடற்படைகளுக்கு இடையே ஒத்துழைப்பையும் நல்லுறவையும் மேம்படுத்தும் நோக்கில், சிறிலங்கா கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட பல நிகழ்ச்சிகளில் இந்திய கப்பல் பணியாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இந்தப் பணியாளர்கள், திருகோணமலைக்கு சுற்றுலா செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம், சிறிலங்கா கடற்படை வீரர்கள் ஐ.என்.எஸ் ‘டெல்லி’ கப்பலில் பயிற்சிகளிலும் ஈடுபடவுள்ளனர்.
பயணத்தை நிறைவுசெய்து ஐ.என்.எஸ் ‘டெல்லி’ கப்பல், எதிர்வரும் ஜனவரி 17 ஆம் இலங்கையில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.