Tuesday, December 24, 2024
HomeLatest NewsIndia Newsஇலங்கையில் இந்தியாவின் இலக்கு; குறி வைக்கப்படும் திருகோணமலை துறைமுகம் – வெளியான தகவல்

இலங்கையில் இந்தியாவின் இலக்கு; குறி வைக்கப்படும் திருகோணமலை துறைமுகம் – வெளியான தகவல்

இலங்கைக்கு இந்தியா நிதி உதவி செய்வதன் பின்னணியில் திருகோணமலை துறைமுகத்தை பெறும் நோக்கம் இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் இலங்கைக்கு இந்திய பிரதிநிதிகள் விஜயம் செய்தால், எதிர்கால உதவிகள் குறித்து பகிரங்கமாக அறிவிப்பர். ஆனால் இம்முறை இந்திய உயர்மட்ட குழு அவ்வாறு அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இந்தியா ஏற்கனவே வழங்கியுள்ள கடன்களுக்காக பல வேலைத்திட்டங்களை தமக்கு வழங்குமாறு கோரியுள்ளது. அத்தோடு திருகோணமலை துறைமுகத்தை அண்மித்த நிலப்பரப்பினையும் கோரியுள்ளதாகவும் தெரியவருகிறது.

திருகோணமலை துறைமுகத்தை அண்மித்த நிலப்பரப்பினைக் கோரினால், அடுத்த கட்டமாக திருகோணமலை துறைமுகமே அவர்களது இலக்காகக் காணப்படும். அரசாங்கத்தினால் இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டால் அனைவரும் கட்சி பேதமின்றி ஒன்றிணைந்து அதனை எதிர்க்க வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நாட்டுக்கு விஜயம் செய்துள்ள இந்த சந்தர்ப்பத்தில், அமெரிக்காவின் எமில்டன் வங்கி ராஜபக்சக்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளது.

நாட்டுக்காக வழங்கப்பட்ட பல நிதி உதவிகள் வெளிநாட்டு வங்கிகளில் ராஜபக்சக்களின் பெயர்களில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக குறித்த வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வரலாற்றில் இதற்கு முன்னர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இவ்வாறு ஆட்சியாளர்கள் மீது வெளிநாடுகளில் வழக்கு தொடரப்பட்டதில்லை.

எனவே தற்போது இலங்கைக்கு உதவுவதானது ராஜபக்சக்களை மேம்பாடடையச் செய்யும் செயற்பாடாகும் என்று சர்வதேசத்தின் மத்தியில் ஒரு நிலைப்பாடொன்று தோற்றம் பெற்றுள்ளது. காரணம் இந்த அரசாங்கம் சர்வதேசத்தின் மத்தியில் பொய்யாகியுள்ளது.

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தம் நல்லாட்சி அரசாங்கத்தில் கொண்டு வரப்பட்ட 19 ஆவது திருத்தம் அல்ல. மாறாக இந்த திருத்தமானது எந்த வகையிலும் நிறைவேற்றதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதாக இல்லை. இந்த அரசாங்கம் தற்போதாவது ஆட்சியை ஒப்படைத்து வெளியேற வேண்டும்.

தற்போது தேர்தல் நடத்தப்பட்டால் அதற்கு நிதியுதவியளிப்பதாக வெளிநாடுகளின் தூதுவர்கள் எம்மிடம் தெரிவித்துள்ளனர். அதே போன்று அரச உத்தியோகத்தர்களும் இலவசமாக தேர்தல்கள் கடமைகளில் ஈடுபடுவதாகக் குறிப்பிட்டுள்ளனர். எனவே விரைவில் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்று குறிப்பிட்டார்.

Recent News