இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிவாரணப் பொதிகள் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்டு சம்பிரதாய பூர்வமாக விநியோகிக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டது.
இன்று காலை 8.30 மணியளவில் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு வந்த நிவாரணப் பொதிகள் சம்பிரதாயபூர்வமாக பொதுமக்களுக்கும் விநியோகிக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் சம்பிரதாயபூர்வமாக நிவாரணப் பொதியை யாழ்.மாவட்ட அரச அதிபர் க. மகேசனிடம் கையளிக்கப்பட்டது.
யாழ் பிரதேசத்தின் 50% ஆனோர் இந்த உதவியினைப் பெற உள்ளனர். 1 இலட்சம் கிலோ கிராம் அளவுடைய 20 ஆயிரம் பொதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் 8 ஆயிரத்து 755 பொதிகள் கிடைத்துள்ளன, மீதி அடுத்த கட்டத்தில் வழங்கப்படும். 15 பிரதேச செயலக பிரிவுகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என மாவட்ட அரச அதிபர் மகேசன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
இலங்கை மக்களுக்கென இந்திய அரசாங்கம் மற்றும் தமிழக முதல்வர் ஸ்டார்லினின் கருணையுடன் இந்த உதவியினைப் பெற்றுள்ளோம். அரிசி, பால்மா அதே போன்று மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்துப்பொருட்கள் மீனவர்களுக்கான மண்ணெண்ணெய் போன்ற அனைத்து உதவிகளும் இலங்கை வாழ் மக்களுக்கு மனநிறைவினையும் தருவதோடு கஷ்ட சுமையினை குறைக்கின்ற நடவடிக்கையாகவும் அமையும் என நம்புகிறேன்.
இந்த அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு வந்து சேர்த்த இந்திய அரசாங்கத்திற்கும், ஒருங்கிணைப்பினை ஏற்பாடு செய்த இந்திய தூதுவர் இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜ் உள்ளிட்ட குழுவினருக்கும் யாழ் மக்கள் சார்பில் நன்றிகளை கூறிக்கொள்கிறேன்.
மேலும் இந்த சிரமத்தின் சூழ்நிலையிலும் பங்களிப்பு செய்த உணவு ஆணையாளர் திணைக்களம், திறைச்சேரி, மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். -என்றார்.