இந்திய மக்களில் 20 கோடி பேருக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளதாக, ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, இம்பீரியல் காலேஜ் லண்டனில் பணிபுரியும் விஞ்ஞானிகள் ஆய்வினை மேற்கொண்டு அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.
அதில், கடந்த 40 ஆண்டுகளில் உலக அளவில் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40% வரை அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. சர்வதேச நாடுகளைச் சேர்ந்த 113 கோடி பேர் ரத்த அழுத்தத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் ஆசிய நாடுகளைச் சேர்ந்த மக்களே உயர் ரத்த அழுத்தத்தில் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அடிப்படையில், சீனாவில் 22.6 கோடி பேர் உயர் ரத்த அழுத்தத்திற்கு உள்ளாகி இருப்பதுடன், இந்தியாவில் 20 கோடி பேர் ரத்த அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளது.
பணிச்சூழல், உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை போன்றவையே மக்களுக்கு, உயர் ரத்த அழுத்தம் ஏற்பட முக்கிய காரணமாக உள்ளதென்றும் ஆய்வை நடத்திய விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஒட்டுமொத்தமாக, சர்வதேச நாடுகளில், 59.7 கோடி ஆண்களும், 52.9 கோடி பெண்களும் உயர் ரத்த அழுத்தத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.