காலிஸ்தான் ஆதரவாளர்கள், இந்திய துணைத் தூதரகத்திற்கு தீ வைத்தமைக்கு அமெரிக்கா கண்டனம் வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் இந்தியாவின் துணைத் தூதரகம் அமைந்துள்ள நிலையில் அதற்கு கடந்த 2 ஆம் திகதி காலிஸ்தான் ஆதரவாளர்கள் தீ வைத்ததாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த தீவைப்பு சம்பவம் தொடர்பான காணொளிகள் தற்பொழுது, சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளதுடன் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2 ஆம் திகதி நள்ளிரவு வேளை மர்ம நபர் ஒருவர் துணை தூதரகத்தை எரிபொருளை ஊற்றி எரித்தமையால் அப்பகுதி முழுவதும் கொழுந்து விட்டு எரிந்து புகை மண்டலமாக காட்சியளித்துள்ளது.
இதையடுத்து, தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதுடன், தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆயினும், இந்த தீ வைப்பு சம்பவத்தினால் எந்த விதமான உயிர்ச் சேதங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், இந்த தீ வைப்பானது காலிஸ்தான் ஆதரவாளர்களால் கடந்த 5 மாதங்களில் இந்திய தூதரகம் மீதான இரண்டாவது தாக்குதல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்திய தூதரகத்திற்கு எதிராக தீ வைத்து நாசவேலை செய்த முயற்சியை அமெரிக்கா வன்மையாக கண்டிப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.