இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி, சீனாவைச் சேர்ந்த ஆய்வு கப்பலை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்துவதற்கு இலங்கை அனுமதி அளித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
அண்டை நாடான இலங்கையில் உள்ள அம்பந்தோட்டையில், சீனா உதவியுடன் துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு இந்த துறைமுகத்துக்கு, சீனாவைச் சேர்ந்த, ‘யுவான் வாங் 5’ என்ற உளவுக் கப்பல் வந்தது.
முன்னதாக இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.’இந்தியாவில் உள்ள ராணுவ நிலைகளை உளவு பார்க்கும் நோக்கத்துடன் இந்த கப்பல் வந்துள்ளது. எனவே, இந்த கப்பலை நிறுத்துவதற்கு இலங்கை அனுமதிக்கக் கூடாது’ என, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனால் இந்த கப்பல், ஒரு வாரத்துக்கு மேல் சர்வதேச கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பின், இலங்கையின் அம்பந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது.
சில நாட்களுக்குப் பின், அந்த கப்பல் புறப்பட்டுச் சென்றது.’எதிர்காலத்தில் சீனாவின் இதுபோன்ற கப்பல்களை நிறுத்த இலங்கை அனுமதி அளிக்கக் கூடாது’என, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த, ‘ஷி யான் 6’ என்ற ஆய்வுக் கப்பல், வரும் அக்டோபரில் இலங்கையில் உள்ள கொழும்பு துறைமுகத்துக்கு வரவுள்ளதாகவும், அங்கு சில நாட்கள் ஆய்வு நடத்த உள்ளதாகவும், செய்தி வெளியாகி உள்ளது.