இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் டெல்லி எனும் யுத்தக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்தக் கப்பல் சிறிலங்கா கடற்படையினரின் கடற்படை மரபுகளுக்கு அமைய வரவேற்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள 163.2 மீற்றர் நீளமுள்ள இந்திய கடற்படைக் கப்பல் ஐஎன்எஸ் டெல்லியில் 450 பேர் பயணித்துள்ளனர். இந்தக் கப்பலுக்கு கப்டன் அபிஷேக் குமார் தலைமை தாங்குகிறார். அத்துடன் கப்பலின் கட்டளை அதிகாரி மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் மேற்கு கடற்படை தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
கப்பல் கொழும்பில் தங்கியிருக்கும் காலத்தில், இரு கடற்படைகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பையும் நல்லுறவையும் மேம்படுத்தும் நோக்கில், சிறிலங்கா கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட பல நிகழ்ச்சிகளில் பணியாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.
அவர்கள் நாட்டில் உள்ள சில சுற்றுலாத் தலங்களுக்கும் செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஐஎன்எஸ் ‘டெல்லி’ கப்பலை பாடசாலை மாணவர்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இரண்டு நாட்டு கடற்படையினரும் கூட்டு பயிற்சியில் பங்கேற்கவுள்ளனர்.
குறித்த கப்பல் செப்டம்பர் 3 ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்படுவதற்கு முன்னர் சிறிலங்கா கடற்படை கப்பலுடன் இணைந்து , கொழும்புக்கு அப்பால் பயிற்சியிலும் ஈடுபடவுள்ளது.