இந்தியப் பெருங்கடல் தீவுக்கூட்டத்தில் இருந்து இந்தியா தனது ராணுவத்தை திரும்பப் பெற ஒப்புக்கொண்டதாக மாலத்தீவு அதிபர் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
“நாங்கள் நடத்திய கலந்துரையாடலில், இந்திய வீரர்களை அகற்ற இந்திய அரசாங்கம் ஒப்புக்கொண்டது. வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க உயர்மட்டக் குழுவை அமைக்கவும் நாங்கள் ஒப்புக்கொண்டோம்,” என்று ஜனாதிபதி முகமது முய்சு மாலேயில் செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்திய ராணுவ வீரர்களை திரும்பப் பெறுவதற்கு புதுடெல்லி ஒப்புக்கொண்டதாக மாலத்தீவு அதிபர் தெரிவித்த போதிலும், இரு தரப்பும் தற்போது இது குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.
துபாயில் நடந்த COP28 காலநிலை உச்சி மாநாட்டையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாலத்தீவு ஜனாதிபதிக்கு இடையேயான சந்திப்பின் போது, துருப்பு விலக்கு விவகாரம் குறித்து சுருக்கமாக விவாதிக்கப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.