Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsஅதிகரிக்கும் சீனாவின் அடாவடி - திரும்பியடிக்க தயாராகும் இந்தியா..!

அதிகரிக்கும் சீனாவின் அடாவடி – திரும்பியடிக்க தயாராகும் இந்தியா..!

இந்தியப் பெருங்கடலில், சீனாவின் அத்துமீறிய ஊடுருவலுக்கு கடிவாளம் போடும் வகையில், ஓமன் மற்றும் மொரீஷியஸ் நாடுகளின் கடற்பகுதிகளில், கப்பல் மற்றும் விமான படைத்தளம் அமைக்கும் பணியை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

இந்தியாவிற்கும், அண்டை நாடான சீனாவிற்கும் இடையே எல்லை பிரச்னைகளில் அவ்வப்போது உரசல்கள் ஏற்பட்டு வருவது தொடர்கிறது. இந்தியாவின் அருணாசல பிரதேசத்தை, சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது.

சீனாவில் நடக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அருணாசல பிரதேசத்தைச் சேர்ந்த வீரர்களை அனுமதிக்க மறுத்து, அடாவடியில் ஈடுபட்டு வருகிறது. அத்தோடு இந்தியாவின் படைகளை குறிவைத்து நிலம் மற்றும் கடல்வழியாக நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர் மிரட்டலை அந்நாடு மேற்கொண்டுள்ளது.

இதுபோன்ற சீனாவின் அடாவடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு ஆரம்பித்துள்ளது. மத்திய அரசின் தரவுகளின்படி, இந்த ஆண்டில் மட்டும் சராசரியாக மாதந்தோறும் சீன கடற்படையின் ஆறு போர்க்கப்பல்கள், இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் வந்துள்ளது தெரிய வருகிறது.

கடந்த, 2019ல் இதன் எண்ணிக்கை 29 ஆக இருந்தது. 2022ல் 43 ஆக அதிகரித்தது. அதேபோல், சீனாவுக்கு சொந்தமான சர்சைக்குரிய ஆய்வு கப்பலான ‘யுவான் வாங் – 5’ கடந்த ஆண்டு ஆகஸ்டிலும், மற்றொரு கப்பலான ‘ஹய் யாங் 24 ஹவோ’ இந்த ஆண்டு ஆகஸ்டிலும் அண்டை நாடான இலங்கையின் கொழும்பு துறைமுகத்துக்கு வந்தது.

இதுபோன்ற, மறைமுக எச்சரிக்கைகள் சீனாவால் விடுக்கப்பட்டு வரும் சூழலில், அதை சமாளிக்க, இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள மத்திய கிழக்கு நாடான ஓமன் மற்றும் கிழக்கு ஆப்ரிக்க தீவு நாடான மொரீஷியசில், அதி நவீன படைத்தளங்களை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஓமனில் உள்ள துக்ம் துறைமுகத்தில் ஒரு தளத்தை நிறுவியுள்ள மத்திய அரசு, அதை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் பணிகளை மேற்கொண்டுள்ளது.

இந்திய கப்பல்களைப் பராமரிக்கவும், பழுது பார்க்கவும், மாற்றியமைக்கவும், இந்திய கடற்படை கப்பல்களுக்கு தங்கும் இடம், எரிபொருள் மற்றும் ஓய்வு வசதிகளை வழங்கவும் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதேபோல், மொரீஷியசில் உள்ள அகலேகா தீவிலும் விமானப் படைத்தளம் அமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டு உள்ளது.

பழங்குடியினர் மட்டுமே வசிக்கும் இப்பகுதிக்கு, 2015ல் சென்ற பிரதமர் மோடி, பல்வேறு கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதன்படி, அங்கிருந்த பழைய விமான ஓடுபாதை, பெரிய விமானங்கள் தரையிறங்கும் வகையில் புதுப்பிக்கப்பட்டது. ராணுவ வீரர்களுக்கான குடியிருப்புகள், பயிற்சி கூடங்கள், மைதானம் போன்றவை அடுத்தடுத்து அமைக்கப்பட்டன.

நவீன கண்காணிப்புக்கான ரேடார்கள், எரிபொருள் கிடங்குகள், கப்பல்கள் வந்து செல்ல உதவியாய் துறைமுக இறங்கு தளங்கள் என, பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அவை அனைத்தும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த இரண்டு படைத்தளங்களையும், தகவல் கண்காணிப்பு இடைமறிப்பு, கப்பல் மற்றும் விமான போக்குவரத்து கண்காணிப்பு ஆகிய பணிகளுக்கு, இந்தியாவால் பயன்படுத்தி கொள்ள முடியும். இந்தியப் பெருங்கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த பணிகள், தொடர் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வரும் சீனாவுக்கு நிச்சயம் நெருக்கடியை அளிக்கும்.

Recent News