மலேசிய மாநிலமான பெர்லிசில் உள்ள மலேசியா- தாய்லாந்து எல்லை வழியாக சட்டவிரோதமாக நுழைய முயன்ற 387 வெளிநாட்டவர்கள் இந்தாண்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் முதல் அக்டோபர் 18ம் தேதி வரை 320 மியான்மர் நாட்டவர்களும் 67 தாய்லாந்து நாட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் எனக் கூறியிருக்கிறார் பெர்லிஸ் மாநில காவல்துறை தலைமை அதிகாரி சுரினா சாட்.
கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட கடந்த ஆண்டு சூழலுடன் ஒப்பிடுகையில், கைது எண்ணிக்கை 7 மடங்கு உயர்ந்துள்ளது.
“முறையான ஆவணங்களின்றி மலேசியாவில் வேலைத்தேடி இவர்கள் வந்திருப்பது விசாரணையின் மூலம் தெரிய வந்தது. மிக அமைதியான நாடாக மலேசியா இருப்பதால் மலேசியாவை இவர்கள் தேர்ந்தெடுத்திருக்கின்றனர்,” என காவல்துறை அதிகாரி சுரினா சாட் தெரிவித்திருக்கிறார்.
கடந்த 2015ம் ஆண்டு பெர்லிஸ் மாநிலத்தில் உள்ள Wang Kelian பகுதியில் மனித புதைக்குழிகள் கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து மலேசிய மாநிலத்தின் சர்வதேச எல்லைப் பகுதி மீது பெரும் கவனம் திரும்பியது. இந்த புதைக்குழிகளிலிருந்து ஆவணங்களற்ற 138 வெளிநாட்டவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டிருந்தன.