Saturday, January 11, 2025
HomeLatest Newsமத்திய குருதி வங்கியில், குருதி சேமிப்பு பைகளுக்கு தட்டுப்பாடு

மத்திய குருதி வங்கியில், குருதி சேமிப்பு பைகளுக்கு தட்டுப்பாடு

மத்திய குருதி வங்கியில், குருதியை சேமிக்கும் பிளாஸ்த்ரிக் பைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், குருதியேற்றத்திற்கான உபகரணங்களுக்கும், அடுத்த வாரமளவில் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என சுகாதார தொழிற்சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அரச மருந்தாளர் சங்கத்தின் தலைவர் அஜித் கே திலக்கரத்ன,

குறிப்பிட்ட காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்காமையால், நோயாளர்களுக்கான சிகிச்சைப் பணிகளுக்கு பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

வைத்தியசாலை கட்டமைப்பில், மருந்துகள், சத்திர சிகிச்சை உபகரணங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் கையிருப்பு தீர்ந்துபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய குருதி வங்கி உள்ளிட்ட ஏனைய அனைத்து குருதி வங்கிகளிலும், குருதியை சேமிப்பதற்கான பிளாஸ்த்ரிக் பைகள் உள்ளிட்ட அவசியமான ஏனைய உபகரணங்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

குருதியேற்றத்திற்கான உபகரணங்கள் கிடைக்காவிட்டால், நாட்டின் வைத்தியசாலைக் கட்டமைப்பில் குருதியேற்றத்தில் பாரிய பிரச்சினை ஏற்படக்கூடும்.

எனவே, இந்தப் பிரச்சினையைத் தீரப்பதற்காக, இயன்றளவு உச்சப்பட்ச நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சரிடம் கோருவதாக அரச மருந்தாளர் சங்கத்தின் தலைவர் அஜித் கே. திலக்கரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில், மத்திய குருதி வங்கியின் பணிப்பாளரான வைத்தியர் லக்ஷ்மன் எதிரிசிங்க பதிலளிக்கையில்,

குருதியை சேமிப்பதற்கான பிளாஸ்த்ரிக் பைகளின் கையிருப்பில் ஓரளவு வீழ்ச்சி நிலவினாலும், இந்த நிலைமையை முகாமைத்துவம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

தேசிய குருதி வங்கியில் 4 வகையான குருதி சேமிப்பு பைகள் பயன்படுத்தப்படுகின்றன.

அவற்றில், சில வகையான பைகளின் தொகையில் ஓரளவு குறைந்த தன்மை உள்ளது.

எனினும், தற்போதைய நிலைமையில், மிகவும் செயற்றிறனுடன் முகாமைத்துவப் பணிகளில் ஈடுபடுவதனால், எவரும் அச்சமடையத் தேவையில்லை.

எனவே, அடுத்த சில மாதங்களுக்கு மிகவும் அவதானமாக செயற்பட்டு இந்தக் கையிருப்பை பேணக்கூடியதாக இருக்கும்.

இதற்கமைய, முகாமைத்துவ பணிகளை மிகவும் அவதானத்துடன் முன்னெடுக்குமாறு விசேட வைத்தியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய குருதி வங்கியின் பணிப்பாளரான வைத்தியர் லக்ஷ்மன் எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மே மாதம் முதலாம் அல்லது 2ஆம் வாரமளவில், மற்றுமொரு தொகை குருதி சேமிப்பு பைகள் கிடைக்கவுள்ளன.

அந்தத் தொகை கிடைத்தால், விநியோகத்தை பிரச்சினையின்றி முன்னெடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Recent News