சைபர் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஜாமீன் மனுவை
தள்ளுபடி செய்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இம்ரான் கானின் பதவிக் காலத்தில் வெளிநாட்டு தலைவர்கள் வழங்கிய விலை உயர்ந்த பரிசுப் பொருள்களை மறைத்து வைத்ததாகவும், அரசுக் கருவூலமான தோஷகானாவிடமிருந்து பரிசுப் பொருள்களைக் குறைந்த விலையில் வாங்கி சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்றதாகவும் இம்ரான் கான் கைது செய்யப்பட்டார். அவ்வாறு கைது செய்யப்பட்ட அவருக்கு, 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
இதையடுத்து, அவா் உடனடியாக கைது செய்யப்பட்டு, பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டார். மாவட்ட செசன்சு கோர்ட்டு அளித்த தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இம்ரான்கானை உடனடியாக விடுவிக்குமாறு சிறைத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
ஆனால், இம்ரான்கான் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டார். இதனால் அவரை சிறையிலிருந்து விடுவிக்கவில்லை. பாகிஸ்தானின் அரசு ரகசியங்களை வெளியிட்டது தொடர்பான வழக்கு விசாரணையில் இம்ரான்கானின் நீதிமன்ற காவல் செப்டம்பர் 13-ம் தேதி வரை உயர்நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
இந்த நிலையில், சைபர் வழக்கின் ஜாமீன் மற்றும் முதல் எப்ஐஆர் ரத்து செய்யக்கோரி சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தாக்கல் செய்த மனுக்களை பாகிஸ்தான் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரலில் கான் ஆட்சியிலிருந்து நீக்கப்பட்டதிலிருந்து 150க்கும்
மேற்பட்ட வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.